டெல்லியில் மசூதிக்கு தீ வைத்த மர்மநபர்கள்: அனுமன் கொடியை ஏற்றி அட்டூழியம், நீடிக்கும் பதற்றம்

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ள நிலையில், அசோக்விஹார் பகுதியில் மசூதி தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது.

டெல்லியில் குடியுரிமை சட்ட  ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த 23-ம் தேதி  ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. இன்றும் போராட்டங்களும், வன்முறைகளும் ஓயவில்லை.

இது வரை 9 பேர் பலியாகி இருக்கின்றனர். பல இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு, வாகனங்கள் கொளுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், அசோக் விஹார் பகுதியில் உள்ள மசூதியை கலவரக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். மசூதியை நோக்கி ஜெய் ஸ்ரீராம், இந்துக்களுக்கே இந்தியா என்ற முழக்கத்துடன் புகுந்த கும்பல் சூறையாடியது.

மசூதியின் பக்கவாட்டில் ஏறிய ஒருநபர், அதன் உச்சியில் அனுமன் கொடியை கட்டுகிறார். அந்த பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

மசூதிக்கு தீ வைத்த போது உள்ளே 5 குழந்தைகள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அவர்களின் நிலைமை என்னானது என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாக வில்லை.

நிலைமை மோசமாக இருப்பதால் அங்கு வசிக்கும் இஸ்லாமியர்களை காவல்துறையினர் பாதுகாப்புக்கான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை வெடித்து வருவதால் பதற்றம் நீடித்து வருகிறது.