டெல்லி: டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கிட் அறிவித்து உள்ளார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 60 நாள்களாக பஞ்சாப், அரியாணா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாததால் குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை அரங்கேறியது. காவல்துறை கட்டுப்பாடுகளை மீறி டெல்லி எல்லைகளில் இருந்து விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் வழக்கமாக தேசியக்கொடி ஏற்றும் இடத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர்.

இதுகுறித்து விவசாய சங்கத்தை சேர்ந்த ராகேஷ் டிக்கிட் பேசியதாவது: டெல்லியில் இன்று வன்முறையில் ஈடுபட்டவர்களை அறிவோம். அவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் போராட்டத்தை சீர்குலைக்க இந்த செயலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.