புதுடெல்லி: கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் மத்திய சீன நகரான வூஹானுக்கு, அக்டோபர் 30ம் தேதி விமானத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது ஏர் இந்தியா.
அந்நகரில், தற்போது கொரோனா பாதிப்பு முற்றிலும் அகன்றுவிட்டதாகவும், அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் இயக்கப்படும் இந்த விமானம், டெல்லியிலிருந்து வூஹானுக்குப் பறக்கும். கொரோனா முடக்கத்தால் சீனாவில் சிக்குண்ட இந்தியர்களை மீட்பதற்காக அனுப்பப்படும் ஆறாவது விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி – குவாங்ஸோ இடையே, அக்டோபர் 23ம் தேதி பறக்கவிருந்த விமானம் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, டெல்லி – வூஹான் இடையே, அக்டோபர் 30 தேதி விமானம் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணிக்கவுள்ளவர்கள், ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால், உதவி மையத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.