மெல்லும் புகையிலைக்கு நாடெங்கும்  தடை விதிக்க டில்லி அரசு கோரிக்கை

 

டில்லி

வாயில் வைத்து மெல்லும் புகையைலைப் பொருட்களுக்கு நாடெங்கும் தடை விதிக்க டில்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

புகையிலையினால் புற்று நோய் வரும் என்பது அனைவரும் அறிந்ததே.    பலரும் புகையிலையை வாயில் அடக்குவது, மெல்லுவது போன்ற பழக்கங்களை கொண்டுள்ளனர்.  இவர்களில் 90% பேருக்கு வாய்ப் புற்று நோய் வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.   ஆயினும் இவ்வாறு புகையிலை உபயோகிப்போர் எண்ணிக்கை குறையவில்லை.

இவ்வாறு வாயில் மெல்லப்படும் புகையிலையை வட இந்தியாவில் கைனி என அழக்கின்றனர்.   இதனுடன் சுண்ணாம்பை சேர்ந்து கலந்து வாயில் அடக்கி அதை மெல்லுவது இளைஞர்களிடம் இருந்து முதியோர் வரை பரவலாக உள்ளது.   தற்போது அது தென் இந்தியாவிலும் பரவி உள்ளது.    டில்லி அரசு இந்த புகையிலைக்கு தடை விதித்துள்ளது.

இது குறித்து டில்லி புகையிலை கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் அரோரா, “கைனி உபயோகிபது தற்போது நாடெங்கும் பரவலாக உள்ளது.   இதை நாடெங்கும் தடை செய்யக் கோரி எங்கள் துறை சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு அளித்தோம்.   இதை மென்று சுவைப்பதால் தடை செய்யப்பட்ட உணவுப் பொருளாக அறிவிக்கவேண்டும்.  அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.    தற்போது இது குறித்து நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளோம்” என கூறினார்.

தற்போது டில்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “உணவு பாதுகாப்பு விதிகள் 2006, பிரிவு 3 இன் கீழ் மத்திய அரசு அரசிதழ் மூலம் இந்த புகையிலைப் பொருட்களை உடனடியாக தடை செய்ய முடியும்.   அல்லது இந்த விதியில் ‘வாயில் போடப்பட்டு மெல்லப்படும் எந்தப் பொருளும் உணவுப் பொருள் எனக் கொள்ள வேண்டும்’  என மாறுதல் செய்வதன் மூலம் இதை தடை செய்யப்பட்ட உணவுப் பொருளாக மாற்ற முடியும்” என மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.