பலாத்கார தண்டனை சட்டம் : இந்தியப் பெண்கள் முன்னேற்ற ஆணையர் உண்ணாவிரதம்

டில்லி

லாத்கார குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கக் கோரி இந்திய பெண்கள் முன்னேற்ற ஆணையர் டில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் தற்போது நடைபெற்றுள்ள இரு பலாத்கார சம்பவங்கள் பெரிதும் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.   கத்துவா பகுதியில் எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.   உன்னாவ் பகுதியில் சட்டமன்ற உறுப்பினரால் 16 வயதுப் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து நாடெங்கும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.   இந்திய பெண்கள் ஆணையத்தின் டில்லி ஆணையர் ஸ்வாதி மலிவால்.   இவர் கடந்த 12ஆம் தேதி அன்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.   அதில் பலாத்காரக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் கடுமையாக்கப் பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.   கடந்த 13ஆம் தேதி முதல் தனது கோரிக்கையை வலியுறுத்து டில்லியில் காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில் ஸ்வாதி உண்ணாவிரதம் இருந்த் வருகிறார்.

தற்போது கடும் வெயில் அடிக்கும் டில்லியில் திறந்த வெளியில் இவர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் வரவேற்பு உண்டாகி உள்ளது.   அந்த உண்ணாவிரதப் பந்தலில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஆதரவாளர்களில் ஒருவரான தேவேந்தர் கவுர் என்பவர் ‘பலாத்காரம் நிறுத்தப் படவேண்டும்” என்னும் இயக்கத்தின் உறுப்பினர் ஆவார்.  அவர். “குழந்தைகள் மட்டும் அல்ல 27 வயதான நானும் இரவு 9.30 மணிக்கு மேல் பயணம் செய்ய பயப்படுகிறேன்.   பேருந்துப் பயணத்திலும், புதியவர்களை சந்திக்கும் போது பாதுகாப்பின்மையை உணருகிறேன்.   மலிவாலின் இந்த போராட்டம் நிச்சயம் காவல்துறைக்கு விழிப்புணர்வை உண்டாக்கி பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் என நம்புகிறேன்” எனக் கூறி உள்ளார்.

இது போல பல போராட்டங்கள் நடைபெற்று வருவது மத்திய பாஜக அரசுக்கு மிகவும் சங்கடத்தை உண்டாக்கி உள்ளதக கூறப்படுகிறது.   அதிலும் குறிப்பாக கத்துவா பலாத்காரக் கொலைக்கு அங்குள்ள நாடோடி இஸ்லாமிய மக்களை அச்சுறுத்த நிகழ்ந்ததாக கூறப்படுவதும்,   பாஜக அமைச்சர்களே பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவான பேரணியில் கலந்துக் கொண்டதும் மேலும் தர்ம சங்கடத்தை உருவாக்கி உள்ளது.