கும்பகோணம்:

டெல்லி பெண் கும்பகோணத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்த நீதிபதி, சிறையிலிருந்து குற்றவாளிகளின் உடல் மட்டுமே வெளியே வரவேண்டும் என கடுமையாக உத்தரவிட்டார்.

வங்கிப்பணி விசயமாக கடந்த 2018ம் ஆண்டு கும்பகோணம் வருகை தந்தை டெல்லியைச் சேர்ந்த இளம்பெண், அங்குள்ள லாட்ஜ்க்கு செல்ல ஆட்டோவில் சென்றபோது, ஆட்டோ ஓட்டுனர் அந்த வேறு வழியாக அழைத்துச் செல்வதாக சந்தேகம் அடைந்த அந்தப் பெண், ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சிக்க, அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த வசந்தகுமார் (24), அஞ்சுகம் நகரைச் சேர்ந்த எஸ். தினேஷ்குமார் (25) ஆகியோர் அப்பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், அவர்களின் நண்பர்களை வரழைவத்த நிலையில், அவர்களும் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தனர்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட பெண், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர்,  வசந்தகுமார், தினேஷ் குமார், புருஷோத்தமன், அன்பரசன்  மற்றும் ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தியும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், மகிளா நீதிமன்ற நீதிபதி  எழிலரசி இன்று அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், வசந்தகுமார் தினேஷ்குமார், புருஷோத்தமன், அன்பரசன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், மரணமடைந்த பிறகே அவர்களது உடலை வெளியே கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றும், நான்கு பேருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தஞ்சை மகளிர் நீதிமன்ற நீதிபதியின் அதிரடி உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.