எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி டாக்டர் : அதிர்ச்சியில் நிர்வாகம்

டில்லி

நாட்டின் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு போலி டாக்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டில்லியை சேர்ந்த 19 வயது இளைஞர் அட்னான் குர்ரம்.   இவர் எய்ம்ஸ் மருத்துவ மனையில் மருத்துவராக பண் புரிவதாக சொல்லிக் கொண்டு வந்துள்ளார்.  இவர் சர்வ சகஜமாக மருத்துவமனைக்குள் செல்வதும்,  மாணவர்களுடன் உரையாடுவதுமாக இருந்துள்ளார்.   சமீபத்தில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை வேலை நிறுத்தம் மற்றும் மராத்தான் ஓட்டப் பந்தயம் ஆகியவைகளிலும் கலந்துக் கொண்டுள்ளார்.

இவர் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் தான் மருத்துவக் கல்லூரி மாணவர் எனவும் மருந்துகள் பற்றி அறிந்துக் கொள்ள மருத்துவமனைக்கு வருவதாகவும் கூறி உள்ளார்.  இவர் மீது சந்தேகம் கொண்ட அவர் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.   அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.   அப்போது அவர் மருத்துவப் படிப்பு படிக்காத போலி டாக்டர் என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

விசாரணையின் போது அவரது மருத்துவ அறிவு காவல்துறையினரை பிரமிக்க வைத்துள்ளது.   அவர் தனது உறவினர் ஒருவருக்கு எய்ம்ஸ் மருத்துவ உதவிக்காக  தான் இவ்வாறு வேடமிட்டதாக கூறி உள்ளார்.  பிரகு அவரே தனக்கு மருத்துவத் துறை பிடித்ததால் மருத்துவர்களுடன் நட்புறவு கொள்வதற்காக இவ்வாறு நடித்ததாகக் கூறி உள்ளார்.   இவ்வாறு வேறு பல காரணங்களையும் கூறி வருவதால் காவல்துறையினரால் அவர் ஏமாற்றியதற்கான உண்மையான காரணத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.

இது குறித்து மருத்துவர்களில் ஒருவரான அர்ஜித் சிங், “அந்த இளைஞர் பலமுறை ஸ்டெதாஸ்கோப்புடன் மருத்துவ மனையின் உள்ளே இருந்ததை நான் கண்டுள்ளேன்.   இங்கு சுமார் 2000 பேர் பணி புரிவதால் அவர் போலி என்பதை என்னால் கண்டறிய முடியவில்லை.   அவர் எங்களது வாட்ஸ்அப் குரூப்பிலும் இடம் பெற்றுள்ளார்.    ஒரு முறை அவர் என்னிடம் தன்னை ஒரு மாணவர் என சொல்லியதால் சந்தேகம் ஏற்பட்டு போலிசில் புகார் அளித்தேன்.  இவ்வாறு எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி டாக்டர் உள்ளது எங்கள் நிர்வாகத்தை அதிர வைத்துள்ளது ” என தெரிவித்துள்ளார்.