புதுடெல்லி: தனது அலுவலகம் அருகே தேங்கியிருந்த கழிவுக் குட்டையை, கடந்த 7 மாதங்களாக சம்பந்தப்பட்ட யாரும் கண்டுகொள்ளாததால், அவர்களின் கவனம் ஈர்க்க, புதிய உத்தியைக் கையாண்டுள்ளார் டெல்லியில் அலுவலகம் நடத்தும் ஒரு வணிகப் பட்டதாரி.

இதுகுறித்து கூறப்படுவதாவது; மேற்கு டெல்லியின் கீர்த்தி நகர், ராமா சாலையில் அமைந்துள்ளது இவரின் அலுவலகம். அதனருகே, 500 மீட்டர் நீளமுள்ள ஒரு கழிவுநீர் குட்டை உருவாகி, கடந்த 7 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

எத்தனையோ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் புகார் கொடுத்தும் கண்டுகொள்வார் இல்லை. நாற்றம் தாங்கமுடியாமல் அந்தப் பகுதிவாசிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனையடுத்து, தருண் பல்லா என்ற அந்த இளைஞர், ஒரு போலியான திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார். அதாவது, ஒரு சாலை நீட்டிப்பிற்கான திறப்பு விழா அது. அதற்காக, அவர் அழைப்பிதழ்களை அச்சிட்டதோடு அவற்றை பல பிரமுகர்களுக்கும் அனுப்பி வைத்தார்.

அதோடு நில்லாமல், பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய பேனர்களையும் தயார்செய்து வைத்து அசத்திவிட்டார். அந்த பேனர்களில், “நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால், நாங்கள் பதிலுக்கு, சேறு, டெங்கு மற்றும் மலேரியா ஆகியவற்றை திருப்பித் தருவோம்” என்று அந்த அரசியல்வாதிகள் சொல்வதுபோல் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

சமூகவலைதளங்களிலும் இந்த பேனர் மற்றும் திறப்பு விழா அம்சங்களை விளம்பரப்படுத்தினார். இதனால் அரண்டுபோன அதிகாரிகள், அனைத்து பரிவாரங்களையும் வந்திறக்கி, 30 நிமிடங்களில் அந்தக் கழிவுநீர் குட்டையை சுத்தம் செய்து, அந்த இடத்தின் தோற்றத்தையே மாற்றிவிட்டனர்.

– மதுரை மாயாண்டி