டெல்லி:

ன்முறையால் பாதிக்கப்பட்ட வடக்குடெல்லி பகுதிக்கு செல்லும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, அங்குள்ள மக்களை சந்தித்து பேசுகிறார். இன்று பிற்பகல் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக டெல்லி காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும்,  ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த முறை சம்பவத்தில் இதுவரை  46 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’ தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 1427 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வன்முறை நடைபெற்ற பகுதிகளுக்கு எதிர்க்கட்சிகள் இதுவரை அனுமதிக்க மறுத்த காவல்துறை தற்போது அனுமதி வழங்கி வருகிறது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, இன்று மாலை வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராகுல் வருவதையொட்டி, வடக்கு டெல்லி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.