காற்று மாசுபாட்டால் டில்லியில் வீடற்றவர்கள் பெரும் அவதி

டில்லி:

ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும், புது தில்லியில் உள்ள காற்றின் தரம் மோசமடைந்து, நகரமானது ஒரு கடுமையான சூழ்நிலையில் மூழ்கிவிடும்.

கடந்த இரண்டு மாதங்களாக அங்கு நிலவும் காற்று மாசுபாட்டால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். காற்று மாசுபாட்டிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அங்குள்ள மக்கள் முகமூடி அணிந்து சாலையில் வலம் வருகின்றனர்.

குளிர்காலங்களில் காற்று சுழற்சியானது குறைந்து, கனமான தூசி, துகள், புழுதி போன்ற பொருள்கள் பூமியின் மேல் புறத்தில் படர்கின்றன. அந்த வகையில், இந்தியாவின் தலைநகரான தில்லியும் காற்று மாசுபாட்டால் ஆண்டு தோறும் குளிர்காலங்களில் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

எனவே, அதிகாலை வேளையில் மக்கள் வீட்டிலேயே தங்கி விடுகின்றனர். ஆனால், வீடற்ற ஏழை எளிய மக்கள் இந்த மாசுபாட்டினால் பெரிதும் அவதி படுகின்றனர்.

நவம்பர் மாதத்தில், டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்துப்படி, ஒட்டுமொத்தமாக காற்றின் தரம் குறியீட்டெண் 320 என்ற அளவில் மிகவும் மோசமான நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, புது டெல்லியில் 46,000 வீடற்ற மக்கள் உள்ளனர்.

“இந்த நெருக்கடியால் வீடற்றவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக நான் நம்புகிறேன்,” என்கிறார் சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் பிரசாந்த் சக்ஸேனா.

மேலும் அவர் கூறுகையில், அவர்கள் எப்போதுமே அபாயகரமான காற்று மாசுபாட்டிற்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு, அரசாங்கம் அவர்களுக்கு காற்று சுத்திகரிப்புடன் கூடிய வசதியோடு அடைக்கலம் அளிக்க வேண்டும், என்றார்.

மேலும், சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வறிக்கையின் படி, காற்று மாசுபாட்டால் இந்தியர்கள் தங்கள் வாழ்நாளில் 4.3 வருடங்களை இழக்கின்றனர் என அதிர்ச்சிமிக்க தகவல் வெளியாகியுள்ளது.