தீபாவளிக்கு முன்பே புகை மூட்டதால் மூடிய டெல்லி : மூச்சுவிட திணறும் மக்கள்
டெல்லியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கும் முன்பாகவே இன்று காலை முதல் டெல்லியில் காற்றின் மாசு காரணமாக புகைமூட்டம் காணப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பனிமூட்டம் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவுக்குச் சென்றதால் கடந்த ஆண்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அவசர நிலையின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தரக்குறியீட்டின்படி காற்றின் மாசு அபாயகர அளவில் 397 யூனிட் ஆக இருந்தது. இது பாதுகாப்பான அளவைவிட 18 மடங்கு அதிக மாசு நிறைந்தது ஆகும்.
இதன் காரணமாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைவிடப்பட்டது. தொழிற்சாலைகள் இயங்கவும், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, நாளை நடைபெறவுள்ள தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிப்பதால் காற்றின் மாசு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுடன், பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி போலீஸார் விதித்துள்ளனர். பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கும் முன்பாகவே டெல்லியில் இன்று காலை காற்று மாசு அளவு மிக மோசமான நிலைக்கு சென்றது. காற்றின் தரக்குறியீடு ‘மிக மோசம்’என்ற அளவில், பிஎம்2.5 துகள்களின் சராசரி அளவு 345 யூனிட் ஆக இருந்தது. இது பாதுகாப்பான அளவைவிட 14 மடங்கு அதிகம்.
அதிகாலை நேரத்தில் அடர்ந்து பனியைப்போல காற்று மாசு மூடியதால் நடை பயிற்சிக்கு சென்றவர்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து காற்று மாசு அளவை குறைக்க உடனடி நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருகின்றது.