டெல்லி வன்முறை பலி 20ஆக உயர்வு! ராணுவத்தை அனுப்ப கெஜ்ரிவால் கோரிக்கை

டெல்லி:

லைநகர் டெல்லி கலவர பூமியாக மாறி வரும் நிலையில், அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்து உள்ளது. இதையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புமாறு மத்தியஅரசுக்கு முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக, எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களும் இடையே  டெல்லியிக் வடகிழக்கு பகுதிகளில் கலவரம் நீடித்து வருகிறது. இன்று 4வது நாளாக வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர், பஜன்புரா மற்றும் சாந்த்பாக் பகுதிகள் போர்களம் போன்று காட்சியளித்தன. எங்கு பார்த்தாலும் சாலையில் கற்கள் சிதறி கிடக்கின்றன. நேற்று  பஜன்புரா, சந்த்பாக், காராவால்நகர் பகுதியில் அதிக அளவில் வன்முறை நடந்தது. மஜ்பூர், பாபர்பூர், விஜய்பார்க், யமுனா விகார் பகுதிகளிலும் வன்முறை பரவியது. சிஏஏ எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.

இருதரப்பினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சந்த்பாக் பகுதியில் கடைகள் கொளுத்தப்பட்டன. கோகுல்புரி பகுதியில் டயர் மார்க்கெட் தீ வைத்து எரிக்கப்பட்டது. கையில் இரும்பு கம்பி, கம்புகளுடன் வீதிவீதியாக வந்த கும்பல் இந்த வன்முறையில் ஈடுபட்டது. கோகுல்புரியில் இரண்டு தீயணைப்பு வண்டிகள் எரிக்கப்பட்டன. பைக் ஷோரூம் கொளுத்தப்பட்டது. அதில் இருந்த பைக்குகள் பற்றி எரிந்தன. வடகிழக்கு டெல்லியில் பல இடங்களில் வன்முறை பரவியது.

வன்முறையை  கட்டுப்படுத்த மாநில காவல்துறையினரும், மத்தியப் படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், வன்முறை காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை  20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த  நிலையில் டெல்லியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அனுப்புங்கள் என்று மத்திய உள்துறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு  அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை களை,  காவல்துறையினரால்  கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை எனவே உடனே ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும், மேலும் பல இடங்களில்  வன்முறை ஏற்படும் சூழல் இருப்பதால், அங்கு 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

இந்த வன்முறைகளின்போது  இரு தரப்பினரும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. 48 போலீசார் உள்பட 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 70 பேர் குண்டு காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.