பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மசோதா: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை:

ஹைட்ரோகார்பன் திட்டங்களை அமல்படுத்தப்படும் காவிரி விவசாய பகுதிகளை தமிழக முதல்வர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற  தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

நேற்று மாலை  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து  அமைச்சர்களும்  கலந்துகொண்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது,  ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் போன்ற திட்டங்களால் பாதிக்கப்படும் காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில், காவிரி டெல்டா  மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு ஒப்புதல்அளிக்கப்பட்டது.

மேலும், இந்த விவகாரம்  தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படவும்   கொள்கை முடிவும் எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக,  டெல்டா பகுதிகளில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு எதிராக எந்த நிறுவனமாகவது வழக்கு தொடர்ந்தால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு தொடர்பான சட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில்  தாக்கல் செய்யப்படுகிறது.