Random image

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கிராமங்களை தத்தெடுப்போம்!: “டெல்டா மாவட்ட மறு கட்டமைப்பு குழு” அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கிராமங்களை தத்தெடுக்கப் போவதாக “டெல்டா மாவட்ட மறு கட்டமைப்பு குழு” அறிவித்துள்ளது.

சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு தன்னார்வல அமைப்புகள் மற்றும் அமைப்பு சாரா தன்னார்கவலர்கள் உதவி வருகின்றனர். நடிகர் ஆரி, “பூவுலகின் நண்பர்கள்” சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் இணைந்து தொடர்ந்து நிவாரணப்பணிகளை செய்து வருகிறார்கள். தற்போது இவர்கள்,  “டெல்டா மாவட்ட மறு கட்டமைப்பு குழு” என்ற அமைப்பை துவங்கியிருக்கிறார்கள்.

இது குறித்து இவ்வைப்பினர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:

“கஜா புயல் கடந்த மாதம் 15ம் தேதி இரவு துவங்கி 16 காலை வேதாரணியத்தில் கரையை கடந்தது. கஜாவின் கோரத்தாண்டவம் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதுதவிர திண்டுக்கல் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கஜாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆகவும் தற்கொலை செய்து இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆகவும் இருக்கிறது.

புயல் பாதித்த மறு கணத்தில் இருந்து தன்னார்வலர்கள், அமைப்புகள் உடனடியாக களத்தில் இறங்கி சென்னை வெள்ளத்தில் எப்படி பணி செய்தோமோ அது போன்ற பணியை மேற்கொண்டோம். புயல் அடித்துக் கொண்டிருந்த அந்த இரவே ஒரு குழுவினர் சென்னையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனமும் பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து மற்ற உபகரணங்களும் எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் மக்களின் உயிர்களை காப்பாற்ற நாகை விரைந்தனர். அப்படி இருந்தும் சுமார் ஆறு உயிர்கள் அவர்களின் ஆம்புலன்ஸிலேயே பிரிந்தது. அதே சமயம் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தையும் பிறந்தது.

இதனை தொடர்ந்து மக்களுக்கு உடனடி தேவையாக பிரதான சாலைகளில் இருக்கும் மரங்களை அகற்றுவது முக்கிய பணியாக இருந்தது. அந்த மரங்களை அகற்றினால்தான் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு நிவாரண உதவிகள் கூட சென்றடையும் என்ற சூழ்நிலை உருவானது.

களத்தில் இறங்கிய மற்ற அணிகள் மரம் அறுக்கும் இயந்திரங்களை சென்னை, கோவை, மதுரை போன்ற ஊர்களில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து சாலையில் கிடக்கும் மரங்களை அறுத்தோம். அதேபோன்று பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தனிநபரின் வீடுகளுக்கு மேல் இருக்கும் மரங்கள், மின் கம்பங்களுக்கு மேல் விழுந்து கிடந்த மரங்கள் ஆகியவற்றை தொடர்ந்து அகற்றினோம்.

மரங்களை அறுக்கும் பணி ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் பொழுது இன்னொரு பக்கம் மக்களுக்கு உடனடி தேவையான நிவாரண உதவிகளான மெழுகுவர்த்தி, கொசுவத்தி, தார்பாய் போன்ற உதவிகளும் செய்யத் துவங்கினோம். இரண்டாவது வாரத்தில் மக்களுக்கான தேவைகள் மாறியது. மக்களின் கையிருப்பு குறைந்து, அவர்கள் பணிக்கு செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. ஆகவே அவர்களுக்கான உடனடி தேவையான அரிசி, பருப்பு மற்றும் அன்றாட தேவையான பொருட்களையும் பல ஊர்களில் இருந்தும் தங்களுக்கு வந்த நன்கொடைகளின் மூலம் வாங்கி கொடுத்து வந்தோம்.

அதோடு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான விவசாய பெருமக்களுக்கும், விவசாய கூலித் தொழில் செய்பவர்களுக்கும் மனப்பயிற்சி என்று சொல்லப்படும் Counselling சில கிராமங்களில் கொடுத்தோம்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் சீரமைத்தல், மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்கள் வழங்குதல் ஆகிய பணிகளும் நடந்து வருகிறது.

மின்சார பணியாளர்கள் மிகச் சிறப்பாக பணி செய்தாலும் போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தினாலும் அரசாங்கம் உள்ளூர் மக்களை பயன்படுத்த தவறிய காரணத்தினாலும் கிராமப் பகுதிகளில் இன்னும் மின்சாரம் வராத ஊர்கள் உண்டு. அதே போன்று எந்த ஒரு விவசாய நிலத்திலும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

மக்களின் அன்றாட அவசிய தேவைகளை நிறைவேற்றி வரும்பொழுதே முழுவதும் வீடுகளை இழந்தவர்களின் கணக்கெடுப்பு பணியையும் மேற்கொண்டு, 100க்கும் அதிகமான பெரும்பாலும் கீற்று வீடுகளை இந்த 4 மாவட்டங்களிலும் கட்டி வருகிறோம்.

இந்த உதவிகள் புரிந்த வெளி மாவட்ட, வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய தருணம் கூட இது.

நம் அணியில் இருக்கும் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் மூலம் பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுக்கும் பணியும் நடந்து வருகிறது.

நிவாரண உதவிகள் ஒருபக்கம் நடந்தேறி வர இப்பொழுது சில பிரதான தேவைகளும் மக்களுக்கு உருவாகி இருக்கிறது. உடனடித் தேவைகளை தாண்டி நீண்டகால தேவைகளும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 4 விதமான சிக்கல் அங்கு ஏற்பட்டுள்ளது.

1. விவசாயம் கடுமையாக வீழ்ச்சியடைந்த காரணத்தினால் விவசாயிகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை உருவாகியுள்ளது. அவர்களுடைய கடன் சுமை ஒரு பக்கம் அவர்களின் கழுத்தை இருக்குகிறது. வீழ்ந்து கிடக்கும் மரங்களை எப்படி வெட்டி அகற்றுவது, அடுத்து எப்படி பயிரிடுவது என்ற எண்ணம் அவர்களை தற்கொலை நோக்கித் தள்ளுகிறது.

2. சிறு விவசாயம் பார்த்து வந்தவர்களுக்கு இன்னும் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வராத காரணத்தினால், தண்ணீர் இல்லாமல் அந்த சிறு விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

3. விவசாய கூலிகளாக வேலை செய்த மக்களுக்கு அடுத்த மூன்று வருட காலத்திற்கு வேலை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது ஆகையால் அவர்களும் தங்களுடைய அன்றாட கூலியை இழந்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

4. தொழிற்சாலைகளுக்கு சென்று கொண்டிருந்தவர்களுக்கும் மின்சாரம் இல்லாத காரணத்தினால் அவர்களுடைய தொழிற்சாலைகள் மூடப்பட்டு இன்னும் வேலைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க குறிப்பாக அவர்களின் விவசாயத்தை மீட்டெடுக்க நீண்டதொரு காலம் பிடிக்கும் என்பது நம் கள ஆய்வில் தெரிந்து கொண்ட விஷயம். அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வரை அவர்களுக்கு நம் உதவிகள் தேவைப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் பொருட்டு தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்களில் களப்பணியாற்ற இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணி செய்த தன்னார்வலர்கள் மற்றும் இயக்கங்கள் கொண்டு இந்த டெல்டா மாவட்ட மறுகட்டமைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டெல்டா மாவட்ட கட்டமைப்பு குழுவானது இந்த பின்வரும் விஷயங்களில் தொடர்ந்து பணி செய்யப் போகிறது. இந்தக் குழுவானது மாநிலத்திலிருந்து செயல்படுவதுபோல், புயல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட டெல்டா மறுகட்டமைப்பு குழு உருவாக்கப்படும். மாநிலத்தில் இருக்கும் குழு ஒரு ஒருங்கிணைப்பு குழுவாக செயல்பட்டு எல்லா மாவட்டங்களுக்கும் தேவையான பணிகளை தொடர்ந்து செய்யும்.

டெல்டா மறுகட்டமைப்பில் குழுவின் கலந்தாய்வில் கீழ்க்கண்ட துறைகளை உருவாக்குவது என்றும் அந்தத் துறை சார்ந்த பணிகள் என்ன என்பது பற்றியும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

அ. வாழ்வாதாரம்

1. விவசாயம்

நிபுணர்கள் குழுவின் அறிவுரைகள் பெறுதல், மாற்று விவசாயத்திற்காக அணுகுமுறைகள், கால்நடைகள், புதிய மரங்களை வழங்குதல், பழைய மரங்களை காப்பாற்றுதல்.

2. மாற்று தொழில்

விவசாய கூலித் தொழில் செய்து வந்தவர்களுக்காக அவர்களுடைய கிராமத்திலேயே பயிற்சிகள் கொடுத்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உண்டாக்குதல்.

குறு மற்றும் சிறு தொழிலுக்கான பயிற்சி முறைகள், SMES/ MSMES Establishment, அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சார் நிறுவனங்களை அமைக்க முயற்சித்தல், சோலார் ரிலேட்டட் வேலைகள், சிறு கடன்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள்

ஆ. கல்வி

10, 12 மாணவர்களுக்கான மற்றும் நீட் பயிற்சி, புத்தகம் மற்றும் வினாத்தாள்கள் தொகுப்பு, தேர்வுக்கான ஆயத்தப் பயிற்சிகள், மனதின்மைக்கான பயிற்சி முறைகள், உளவியல் ஆலோசனைகள்.

இ. சுகாதாரம்

சுகாதார மேம்பாடு, மனதின்மைக்கான பயிற்சி, மருத்துவ முகாம்கள்.

ஈ. நிவாரணம்

மரங்களை அகற்றுதல், நிவாரண பொருட்கள், வீடுகள் சீரமைப்பு , மீனவர்களுக்கான உதவிகள்.

உ. காலநிலை மாற்றத்தால் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு இயற்கை சீற்றங்களை சந்தித்து வருகிறது, கடற்கரை மாவட்டங்களில் பேரிடர் செய்திகளை மக்களிடம் முன்னரே கொண்டுசேர்க்கும் கட்டமைப்புகளை அரசுடன் சேர்ந்து மேற்கொள்தல்.

சுற்றுச்சூழலை சீர்குலைக்கும் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல்.
ஊ . அரசுடன் இணைந்த செயல்பாடுகள்

அரசு சார்ந்த திட்டங்களை அறிதல், சாமானியர்களுக்கு சென்று சேரும் வழிமுறைகள், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நல்லுறவை பேணுதல்.

இந்த மேற்கொண்ட துறைகளுக்கு வலு சேர்க்கும் பொருட்டு, கீழ்க்கண்ட இரண்டு துறைகளும் செயல்படும்.

1.மக்கள் தொடர்பு

கள ஆய்வின் அடிப்படையில் தேவைகளை அறிதல், பகுதி சார் பொறுப்பாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல், களத்திற்காக பணிபுரியும் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல், உதவும் மனம் உள்ள நல் உள்ளங்கள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

2. நிர்வாகம்

மேலாண்மை, அனைத்து துறைகளுடன் தொடர்பு, ஒருங்கிணைப்பு, பணிகளை செய்து முடித்தலுக்கான வழிகாட்டுதல், செய்து முடித்தமைக்கான பதிவுகளை உண்டாக்குதல்.

மேற்கண்ட துறைகளில் பொறுப்பாளர்களை தீவிர ஆலோசனைக்குப் பிறகு நியமிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாம் தொடர்ந்து செய்து வரும் பணிகளை காண, நீங்க்ள் இணைந்து பணியாற்ற, ஏற்கனவே களப் பணி செய்பவர்கள் மேலும் உதவி பெற டெல்டா மறுகட்டமைப்பிற்காக இந்த வலைதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது – http://gajahelp.valaitamil.com/villages/. நம்முடன் பணியாற்றும் மற்ற இயக்கங்களின் வலைதள பக்கங்களிலும் இவை பதிவேற்றப்படும்.

இந்த குழுவில் அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நமது நோக்கம். டெல்டா மாவட்டங்களை மீட்டெடுக்க ஓராயிரம் கைகள் வேண்டும். களத்தில் பணி செய்யும் அனைவருக்கும் மேலும் உதவும் பொருட்டு உருவாக்கப்பட்ட இந்த குழு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உங்கள் ஒவ்வொருவரின் உதவியியையும் எதிர்பார்க்கிறது.

தொடர்பு எண் : 9791050512