குடிநீர் பஞ்சம் எதிரொலி: ஊரை காலி செய்யும் டெல்டா கிராம மக்கள்

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை மற்றும் திருவாரூரில் உள்ள கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாட்டு காரணமாக, ஊரை விட்டு வெளியேற 5 கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கிராமப்புறங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கிராம பெண்கள் தண்ணீரை தேடி காலிக்குடங்களுடன் அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் தண்ணீருக்காக பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் மிகவும் அவதியடைந்து வருகின்றன. இதனால் அதிகாரிகளை சந்தித்து தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புகார் தெரிவித்தாலும் நிலத்தடி நீர்மட்டம் அதாள பாதாளத்துக்கு சென்று விட்டதால் குடிநீர் பஞ்சத்தை போக்க வழியில்லாமல் இருந்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட திருமருகல், நெய்க்குப்பை, வேலங்குடி, கரம்பை ஆகிய 5 கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதே நிலை நீடித்து வந்ததால் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் இன்று 5 கிராம மக்களும் ஒரே இடத்தில் திரண்டனர். பின்னர் தண்ணீர் கிடைக்காமல் பக்கத்து கிராமங்களை தேடி செல்லும் நிலை உள்ளது. எனவே தண்ணீர் கிடைக்கும் ஊரில் சிறிது நாட்கள் வரை குடியேறலாம் என்று முடிவு செய்தனர்.

இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் ஆத்திரத்தில் இருந்த கிராம மக்கள், அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் அதிகாரியின் ஜீப்பை மறித்து தரையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து திருமருகல் ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்தார். இதனால் சுமார் 2 மணி நேரமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published.