சென்னை: ஒழுங்குமுறை கண்காணிப்பு மற்றும் ஆட்சிமுறை மதிப்பாய்வுகள் அதிகரித்துவரும் நிலையில், வணிகத்தை வழிநடத்த உதவும் பட்டயக் கணக்காளர்களுக்கான தேவையும் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கல்வி நிறுவனத்தினுடைய(‍ICAI) வேலை வாய்ப்பு பதிவுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் மூலம் இத்தகவல்கள் தெரிய வருகின்றன.
பணி வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பட்டயக் கணக்காளர்களுக்கான சம்பள விகிதமும் அதிகரித்துள்ளன. சர்வதேச பணி நிலைகளுக்கான சம்பளம் ஆண்டிற்கு ரூ.36 லட்சம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.

ஐசிஏஐ வேலைவாய்ப்பு சுழற்சியில் பங்குகொள்ள விரும்பிய 6,646 தகுதிபெற்ற பட்டயக் கணக்காளர்களுக்கு, 2019ம் ஆண்டு பிப்ரவரி – மார்ச் காலகட்டத்தில் மட்டும் 3,815 பணிவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், கடந்த 2018ம் ஆண்டு காலகட்டத்தில் 1,473 பணிவாய்ப்புகள்தான் கிடைத்தன.

Accenture, Alstom, Barclays Global Services, Flipkart, Amazon, ITC மற்றும் ANI Technologies (Ola) போன்ற நிறுவனங்கள் இந்தமுறை, ஐசிஏஐ வளாக நேர்காணலின் மூலம் தங்களுக்கான பட்டயக் கணக்காளர்களை தேர்வுசெய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வங்கித் துறைகளில் பட்டயக் கணக்காளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.