இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபகாலமாக பேரறிவானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பரோலில் விடும்படி கோரிக்கை விடுத்த பேரறிவாளன், அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

எனக்கு சமீப நாட்களாக உடல் குறைவு ஏற்பட்டு வருகிறது. அதோடு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ள எனது தந்தையை பார்க்க 30 நாட்கள் பரோலில் விட வேண்டும்.

எனது 69 வயது தாயார் அற்புதம் அம்மாள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, பலமுறை சாலைகளில் மயக்கமடைந்து விழுந்திருக்கிறார். என் பெற்றோர்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத நிலையில், அவர்களின் மகனாக சிறிது காலம் பெற்றோரை கவனித்துக் கொள்ளும் என் கடமையை நிறைவேற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.