லண்டன்:

“நிதிமுறைகேடு செய்பவர்கள் நிரந்தரமாக தங்கி விட பிரிட்டனின் தாராளவாத ஜனநாயகம் இடம் கொடுக்கிறது” என்று லண்டனில் பேசிய இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் இகானமிக்ஸ், தெற்காசிய மையம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அருண் ஜேட்லி பேசியதாவது:

“வங்கிகளிலிருந்து கடன் பெற்றால் அதனை திருப்பி செலுத்த வேண்டிய தேவையில்லை, லண்டனுக்கு வந்து நிரந்தரமாக தங்கி விடலாம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பிரிட்டனில் உள்ள தாராளமய ஜனநாயகமும் இத்தகையோர் தங்க அனுமதி அளிக்கிறது. இந்த ‘இயல்பு’ நிலையை உடைக்க வேண்டும்.

இந்தியாவில் முதல் முறையாக நிதிமுறைகேடு செய்யும் பேர்வழிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் நாட்டை விட்டு ஓடுகின்றனர், அவர்கள் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. இதுதான் முதன் முறையாக இவர்களுக்கு இந்தியா விடுக்கும் செய்தியாகும். இல்லையெனில் முறைகேடு செய்து விட்டு தப்பியோடுபவர்களுடன் நாம் வாழவே பழகியிருப்போம்” என்று ஜெட்லி பேசினார்.

விஜய் மல்லையாவை மனதில் வைத்தே ஜெட்லி பேசியதாக சொல்லப்படுகிறது. ஆனால் மூத்த பிரிட்டன் அமைச்சர்கள், பிரிட்டன் வெளியுறவு செயலர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை நாளை (திங்கள்) ஜெட்லி சந்திக்க இருக்கிறார். அப்போது, மல்லையா விவகாரம் விவாதிக்கப்படுமா என்பது பற்றி ஜேட்லி உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.