சென்னை:

வேளச்சேரியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், பல ஆண்டுகள் இழுபறிக்கு பிறகு தற்போது, ஆக்கிரமிப்பு நிலம் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி  மீட்கப்பட்டு வருகிறது..இதன் மதிப்பு ரூ.200 கோடி என தெரிகிறது.

சென்னை வேளச்சேரியில் ரயில்வேக்கு சொந்தமான 5  ஏக்கர்  இடத்தை பலர் ஆக்கிரமித்து வீடுகள், வணிக வளாகங்கள் கட்டி வசித்து வந்தனர். இந்த இடத்தை ஒப்படைக்கும்படி பல முறை நோட்டீஸ் வழங்கியும், அங்கிருந்தவர்கள் வெளியே மறுத்ததை தொடர்ந்து, நீதி மன்றமும், அவர்களை வெளியற்ற தமிழக வருவாய்த்துறைக்க  உத்தரவிட்டது.

இதையடுத்து,  வருவாய்த்துறையினர் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்  5 ஏக்கர் நிலத்தை மீட்டு ரயில்வே வசம் ஒப்படைத்தனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட இடத்துக்கு அன்னை இந்திரா நகர் என பெயரிடப்பட்டிருந்த நிலையில்  அந்த பகுதியை சேர்ந்த அதிமுக தலைவர் மீன் சந்தை நடத்தி வந்தார். மேலும் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கு வசித்து வந்தனர். அவர்களுக்கு அரசியல் கட்சியினரின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 1992ம் ஆண்டு தாசில்தார் ஒருவர் 312 பேருக்கு பட்டாக்கள் வழங்கி ஆளுங்கட்சி யினருடன் இணைந்து வசூல் வேட்டை நடத்தி உள்ளார். ஆனால், 2003ம் ஆண்டில், தாசில்தாருக்கு பட்டா வழங்க உரிமை இல்லை என்று கூறி  ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அந்த இடத்தை ரயில்வேக்கு மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் ஆக்கிரமிப்பாளர்கள் வெளி யேற உத்தரவிட்ட நிலையில், குடியிருப்புவாசிகள் உச்சநீதி மன்றத்தை நாடினர். உச்சநீதி மன்றமும் கைவிரித்து விட, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

காவல்துறையினர் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற முயற்சித்தபோது,   அவர்களை தடுத்து நிறுத்திய அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளச்சேரியில் உள்ள செல்போன் டவரில் ஏறி ஒருவர் போராட்டம் மேற்கொண்டார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதையடுத்து அவரை சமாதானப்படுத்தி காவல்துறையினர் கீழே இறங்க வைத்தனர்.

இந்த நிலையில் மீண்டும் வருவாய்த்துறை அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.