இலங்கை: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் முற்றம் இரவோடு இரவாடி இடிக்கப்பட்ட நிகழ்வு அங்குள்ள தமிழ் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அதுகுறித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜா விளக்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் அங்கு படிக்கும் தமிழ் மாணாக்கர்களால் அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் இதுபோன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கு,  பல்கலை நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டியது அவசியம். அதனால், இந்த கட்டுமானம் பல்கலைக்கழக நிர்வாகத்தில் அனுமதியுடன்தான் கட்டப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜா  அதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல்,  இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்து நடவடிக்கை எடுத்துள்ளார். இது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக துணைவேந்தர் இல்லத்துக்கு முன்பாகவும் துரோகியே வெளியே வா என்ற கோஷமுடன் போராட்டம் நடைபெற்றது. இதனால், அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில்,  முள்ளிவாய்க்கால் முற்றத்தை  அகற்றியிருக்காவிட்டால் பல்கலைகழகத்தில் உள்ள ஏனைய ஸ்தூபிகளையும் அகற்றியிருப்பார்கள் என யாழ்.பல்கலை துணைவேந்தர் துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜா விளக்கமளித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகம் என்பது அரசாங்கத்தினுடைய சொத்து எனவே அரசாங்கத்தினுடைய உத்தரவை  நடைமுறைப்படுத்த வேண்டியது துணைவேந்தர் ஆகிய எனது கடமை. அதன் அடிப்படையிலேயே நான் இந்த தூபியினை இடித்து அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் குறித்த தூபி அமைப்பதற்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை என குறிப்பிட்டார்.

மேலும், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் எந்த பொதுமக்களும் இறக்கவில்லை என்பதால், நினைவுச் சின்னம் தேவையில்லை. தனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் அடிப்படையில் அனுமதி இல்லாத கட்டடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிவித்தலின் அடிப்படையிலேயே நான் அதனை அகற்றியிருந்தேன். இதனை அகற்றத் தவறி இருந்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்படும் ஏனைய பொங்குதமிழ் தூபி மற்றும் மாவீரர் நினைவாலயம் என்பனவும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.