பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வருமான வரி தாக்கல் 1% குறைந்தது : பொருளாதார நிபுணர்கள் தகவல்

புதுடெல்லி:

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் 2018-19-ல் மின்னணு முறையில் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.


கடந்த 2016-ம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என மோடி அரசு அறிவித்தது.  மேலும், 45 நாட்களுக்குள் இந்த நோட்டுகளை வங்கியில் டெப்பாஸிட் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களை மத்திய அரசு நிர்பந்தித்தது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகும் என்றும், வரி ஏய்ப்பவர்கள் எண்ணிக்கை குறையும் என்றும் மதிப்பிடப்பட்டது.

ஆனால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 1 சதவீதம் குறைந்து போனது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் 2017-18 ம் ஆண்டு 6.74 கோடி பேர் மின்னணு மூலம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், 2018-19-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 6.68 கோடியாக குறைந்துள்ளது வருமான வரித்துறையினரின் ஆவணங்கள் மூலம தெரியவந்துள்ளது.

இரு ஆண்டுகளிலும் வருமான வரி தாக்கல் செய்வோர் விவரம் முரணாக உள்ளதால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.