பணமதிப்பிழப்பால் நாட்டிற்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு!! யஸ்வந்த் சின்கா பேச்சு

காந்திநகர்:

பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நாட்டிற்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஸ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்கா கூட்டத்தினர் மத்தியில் பேசுகையில், ‘‘இந்த நாட்டை ஆண்ட பல மன்னர்கள் பணமதிப்பிழப்பை கொண்டு வந்திருக்கிறார்கள். 700 ஆண்டுகளுக்கு முன்பு 1325-1351 ஆண்டு காலத்ததில் முகமது பின் துக்ளக் என்ற மன்னர் துக்ளக் தர்பார் நடத்தினார். அவர் அப்போது புழக்கத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்துவிட்டு, தனது ரூபாய்களை அறிமுகம் செய்தார்.

இவர் டில்லியில் இருந்து தலைநகரை தவுலதாபாத்துக்கு மாற்ற முயற்சித்த விவகாரத்தில் புகழ் பெற்றவர். அதோடு தங்கம், வெள்ளி நாணயங்களை செம்பு, வெங்கல டோக்கன் ரூபாய்கள் மூலம் மாற்றவும் நடவடிக்கை எடுத்தார். பணமதிப்பிழப்பு என்பது முக்கியமானது. அதை தான் அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவு செய்தார். நிதியமைச்சரையோ? ரிசர்வ் வங்கி கவர்னரோ? அறிவிக்காமல் தானே அந்த அறிவிப்பை வெளியிட்டார்’’ என்றார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘இந்த அறிவிப்பை வெளியிட்டு அவர் மேற்கொண்ட ஒரு மணி நேர உரையில் 74 அல்லது 75 முறை கறுப்பு பணம் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதோடு கள்ள ரூபாய் நோட்டு, பயங்கரவாதம் குறித்த வார்த்தைகளையும் அவர் குறிப்பிட்டார். ஆனால், டிஜிட்டல் மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்து மோடி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. பணமதிப்பிழப்பின் நோக்கம் நிறைவேறவில்லை என்பதை மோடி உணர்ந்த பின்னர் தான் டிஜிட்டல் மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்து பேச தொடங்கினார்.

அதன் பின்னர் யாரிடம் பணமே இல்லை. இந்த நாடே ரொக்கமில்லாத நாடாக மாறிவிட்டது. பணமதிப்பிழப்புக்கு பின் 18 லட்சம் டெபாசிட் தொடர்பாக விசாரணை நடக்கிறது என்று மோடி கூறினார். இந்தியா திருடர்களின் தேசம் என்ற செய்தி உலகம் முழுவதும் பரவிவிட்டது. நாம் அனைவரும் சட்ட விரோத செயல்படுகிறோம். யாரிடமும் நேர்மை இல்லை. பணமதிப்பிழப்பால் நாட்டில் ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று பேசினார்.

‘‘தற்போது புதிய கலாச்சாரம் ஒன்று உருவாகி வருகிறது. அனைத்துமே டிவி நிகழ்ச்சியாக தான் நடந்துகொண்டிருக்கிறது. யாருமே நம் முன்னால் எதையும் செய்வது கிடையாது. மத்தியில் வாஜ்பாய் 6 ஆண்டுகள் ஆட்சி செய்தார். கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் எதுவுமே செய்யவில்லை என்றால், வாஜ்பாயின் செயல்பாடுகள் அர்த்தமற்றதாகிவிடுகிறது.

பின்னர் ஏன் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?. தான் செய்வது தான் சரி. இதில் யாரும் தலையிட கூடாது என்ற ரீதியில் செயல்பட்டால் எந்த பணியும் நடக்காது. ஒரு மித்த கருத்தை உருவாக்க வேண்டும். எதிர்கட்சிகள் எதிரிகள் கிடையாது என்ற பாடத்தை நான் வாஜ்பாயிடம் கற்றுக் கொண்டேன்’’ என்றார் சின்கா. இந்த நிகழ்ச்சியில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தாவும் கலந்துகொண்டார்.