பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் வளர்ச்சி 2% வரை பாதிப்பு – அமெரிக்கா நடத்திய ஆய்வில் தகவல்

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் வளர்ச்சி 2சதவிகிதம் பாதிக்கப்பட்டதாக அமெரிக்கா நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி பணமதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தது. இதனால் நாட்டில் புழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்தார்.

gdp

இது புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தில் 86 சதவிகிதம் அதிகமாகும். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் நாட்டு மக்கள் பெரிதளவில் பாதிப்படைந்தனர். குறிப்பாக நடுத்தர மக்களும், ஏழை மக்களும் மிகக்கடுமையாக பாதிப்படைந்தனர்.

இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த தேசிய பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு ஆய்வு ஒறை நடத்தியுள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர்கள் கேபிரியேல் ஜோட்ரோவ்ரிச், கீதா கோபிநாத் ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு குறித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ”2016 நவம்பரில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டம் இந்தியாவின் வளர்ச்சியை பாதித்து விட்டது.அன்றைய கால கட்டத்தில் சுமார் 2 சதவீத வளர்ச்சியை பண மதிப்பிழப்பு பாதித்து இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் 3 சதவீதம் வரை பாதிப்பு இருந்ததாகவும், அதன் பிறகு பல மாதங்கள் இதன் தாக்கத்தால் பாதிப்புகள் தொடர்ந்ததாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரி வசூல் அதிகரிப்பு, நிதி அமைப்புகளில் சேமிப்பு அதிகரிப்பு மற்றும் பணமில்லா பரிவர்த்தனை முறைகள் அதிகரிப்பு உள்ளிட்ட நீண்ட கால பலன்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.