கமதாபாத்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பணமதிப்புக் குறைப்பு தினம், பொருளாதாரத்துக்கும் குடியுரிமைக்கும் கறுப்பு தினம் என கூறி உள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் வர்த்தகர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துக் கொண்டார்.   அப்போது பணமதிப்புக் குறைப்பு பற்றியும் ஜி எஸ் டி பற்றியும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார்.

அவர் தனது உரையில், “பணமதிப்புக் குறைப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ஆம் தேதி இந்த தேசத்துக்கு ஒரு கறுப்பு தினம்.   முக்கியமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் குடியுரிமைக்கு  கறுப்பு தினம்.  உலகின் எந்த ஒரு குடியரசு நாட்டிலும் இது போல ஒரு தவறான நடவடிக்கையை எடுக்கப்பட்டதாக சரித்திரத்தில் காணப்படவில்லை.   இந்த பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை என்பது ஒரு திட்டமிட்ட சட்டபூர்வமான கொள்ளை.    இதுவரை அது அமுல்படுத்தப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவில்லை.  தவறு செய்தவர்கள் முழுவதும் தப்பித்து விட்டனர்.   நாட்டில் உள்ள மத்தியதர மற்றும் குறும் தொழில் செய்வோர்கள் இதனால் பாதித்தது மட்டுமே நடந்துள்ளது.

அதே போல காங்கிரஸ் கூட்டணி அறிவித்த ஜி எஸ் டி திட்டத்தை மாற்றி அமைத்து இந்த அரசு அமுலாக்கியுள்ளது.    காங்கிரஸ் அரசில் அதிக பட்ச ஜி எஸ் டி என்பது 18% என அறிவிக்கப்பட இருந்ததில், இந்த அரசு பல படிகளை ஜி எஸ் டியில் அமைத்தது மட்டுமின்றி அதிகபட்சமாக 28% ஜி எஸ் டி என அமுலாக்கி உள்ளது.  அரசுக்கு எதிர்கட்சிகளும் மற்றும் தனியார் கொடுத்த எந்த யோசனையையும் அரசு ஏற்கவில்லை.    ஜி எஸ் டி அமுலாக்கம்,  மற்றும் பணமதிப்புக் குறைப்புக்குப் பின் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் மட்டும் 60  ஆயிரம் விசைத்தறிகள் ஓடவில்லை.   இதனால் பலர் வேலை இழந்துள்ளனர்.  100 விசைத்தறிகள் ஓடவில்லை எனில் அது 35 பேரின் வேலை வாய்ப்பை பாதிக்கும்.

அது மட்டும் இன்றி பொருளாதாரம் மிகவும் கீழ் நோக்கி சென்றுள்ளதால் பலரும் இந்தியாவில் முதலீடு செய்ய அஞ்சுகின்றனர்.   இந்த நிலைக்கு முழுக் காரணம் மத்தியில் ஆளும் பா ஜ க அரசே ஆகும்.   தற்போது குஜராத்தில் மாற்று அலை வீசி வருகிறது.   காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அனைத்து தரப்பினரின் கருத்துக்கும் மதிப்பு அளித்து நாட்டை முன்னேற்றுவோம்” என தெரிவித்தார்.