பணமதிப்பிழப்பு மிருகத்தனமான நிதி அதிர்ச்சி : முன்னாள் பொருளாதார ஆலோசகர்

--

டில்லி

முன்னாள் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு மிருகத்தனமான நிதி அதிர்ச்சி என வர்ணித்துள்ளார்.

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்தவர் அரவிந்த் சுப்ரமணியன். அதன் பிறகு அவர் அந்தப் பதவியில் இருந்து தனது தனிப்பட்ட பணிகள் காரணமாக விலகுவதாக அறிவித்து ராஜினாமா செய்தார். மோடியால் கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அப்போது இது குறித்து அரவிந்த் சுப்ரமணியன் எந்த கருத்தும் சொல்லவில்லை.

தற்போது அரவிந்த் சுப்ரமணியன் ஒரு ஆங்கிலப் புத்தகம் எழுதி உள்ளார். “ஆஃப் கவுன்சல் : தி சேலஞ்சஸ் ஆஃப் தி மோடி – ஜெட்லி எகானமி” என பெயரிடப்பட்டுள்ள அந்தப் புத்தகத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து முதல் முறையாக அரவிந்த் சுப்ரமணியன் விமர்சனங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து மோடி தம்மிடம் ஆலோசனை நடத்தினாரா இல்லையா என்பதை அவர் குறிப்பிடவில்லை.

தனது புத்தகத்தில் அரவிந்த் சுப்ரமணியன், ”கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி நாட்டில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, மிகப்பெரிய, மிருகத்தனமான, நிதிஅதிர்ச்சியாகும். திடீரென நடத்தப்பட்ட தாக்குதலால் புழக்கத்தில் இருந்த 86 சதவீத கரன்சிகள் திரும்பப் பெறப்பட்டன. நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி(ஜிடிபி) பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது. பணமதிப்பிழப்புக்குப்பின் பொருளாதார வளர்ச்சிவேகம் குறைந்து, அதன் சரிவு வேகமாக அதிகரித்தது.

பணமதிப்பிழப்புக்குப் முன்பாக 6 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சராரசரியாக 8 சதவீதம் இருந்தது. ஆனால், பணமதிப்பிழப்புக்குப்பின் 7 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீத சராசரி வளர்ச்சிக்குக் குறைந்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சிவேகம் குறைந்துவிட்டது என்று கூறுவதில் ஒருவருக்கும் எந்தவிதமான பிரச்சினை இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. பணமதிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துத்தான் விவாதம் இருக்கிறது, அதாவது வளர்ச்சியின் சதவீதம் 2 சதவீதம் குறைந்துவிட்டதா அல்லது அதற்கும் குறைந்துவிட்டதா என்பதுதான்.

அதுமட்டுமல்லாமல், உண்மையான உயர் வட்டி வீதம், ஜிஎஸ்டி நடைமுறை மற்றும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஆகிவையும் பாதித்தது.

பணமதிப்பிழப்பு போன்ற பேரதிர்ச்சி நடக்கும்போது, நாட்டில் உள்ள அமைப்புசாரா துறைகள்தான் முதன்மையாகப் பாதிக்கப்பட்டது. அதேசமயம், வேறு வழியின்றி பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால், மின்னணு பரிமாற்றத்துக்கு மாறத் தொடங்கினார்கள்.

அரசியல்ரீதியாகப் பார்க்கும்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது எப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கை. சமீபத்திய வரலாற்றில் எந்த நாடும் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இயல்பான நேரங்களில் அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ படிப்படியாக மேற்கொள்வார்கள். போர், உயர் பணவீக்கம், பணப்பிரச்சினைகள், அரசியல்குழப்பம் ஏற்படும்போதுதான் திடீரென பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படும். என்னைப் பொறுத்தவரை பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகவும் நிதானமாகவே இருந்தது.” 

என குறிப்பிட்டுள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்து 2 ஆண்டுகளை கடந்த பின்னரும் அந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அந்த நடவடிக்கையை குறித்து கடுமையாக விமர்சித்திருப்பது மக்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.