கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி ரூபாய் நோட்டுக்களை தடைசெய்த முயற்சி விழலுக்கிறைத்த நீரைப்போல வீணாவது உறுதி என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் பிரதீப் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

notes7

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கள்ள நோட்டு வெறும் 0.028% ஆகும். பணமாக பதுக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தின் விகிதம் வெறும் 10% ஆகும். இந்த 0.028% மற்றும் 10% பணத்தை ஒழிக்க 86% அளவுள்ள 500 மற்றும் 1000 நோட்டுக்களை முடக்கியது எவ்விதத்தில் அறிவார்ந்த நடவடிக்கை ஆகும்? இது எவ்வளவு தூரம் பொருளாதாரத்தை பாதிக்கப் போகிறது என்று முன்னெச்சரிக்கையாக கணக்கிட்டிருக்க வேண்டாமா?
இப்போது கையிருப்பில் உள்ள வெறும் 13% பணத்தை வைத்து எப்படி சமாளிக்க முடியும்? அவை வெறும் 10,20,50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களே, மிச்சமுள்ள 86% நோட்டுக்கள் 500 மற்றும் 1000 ரூபாய்களாகும்.
நாட்டில் உள்ள நான்கு கரன்சி அச்சகங்களும் முழுவீச்சில் பணியாற்றி புதிய பணத்தை அச்சிட்டால் கூட நிலைமை சீரடைய நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும் என்று பிஸ்வாஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். டிசம்பர் முதல் தேதிக்கும் மேல் சம்பளப்பணத்தை எடுக்க எல்லோரும் முயலும்போதுதான் பிரச்சனை இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பணத்தை வெளிநாடுகளில் கொடுத்து அச்சிடலாம் என்று சிலர் ஆலோசனை கூறுகிறார்கள். அது இன்னும் ஆபத்தானதாகும். நமது நாட்டுப் பணம் அச்சிடும் முறையை வெளிநாட்டினர் கையில் கொடுப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.