ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் சிறு தொழில்கள் துறை பாதிப்பு…ரிசர்வ் வங்கி அறிக்கை

டில்லி:

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி.யால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) பிரிவு பெரும் சரிவை சந்தித்தது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னரும் இந்த துறையில் எழுச்சி ஏற்படவில்லை. தொடர்ந்து இந்த தொழில்களை மேம்படுத்த கடன் கிடைப்பது சிக்கலாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி சார்பில் ‘மின்ட் ஸ்ட்ரீட் மெமோ’ என்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘2017ம் ஆண்டில் எம்எஸ்எம்இ துறைகளுக்கு கடன் வழங்குவது மிகவும் குறைந்தது. இதன் பின்னர் தற்போது இந்த துறை மீண்டு வருகிறது. 2015ம் ஆண்டு மத்தியில் இருந்த நிலைமை தற்போது திரும்பியுள்ளது. நுண் கடன், வங்கி கடன், என்பிஎப்சி கடன்கள் போன்றவை இந்த துறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்திய பின்னர் இந்த துறைகளில் ஏற்றுமதி வெகுவாக பாதித்துள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த துறைகளில் 6.30 அலகுககள் உள்ளன. இதன் மூலம் 11.10 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நாட்டின் மொத்த உற்பத்தியில் இதன் பங்கு 30 சதவீதமாகும். உற்பத்திய துறையில் 45 சதவீதமும், ஏற்றுமதியில் 40 சதவீதமும் பங்களித்து வருகின்றன.

மேலும், அந்த அறிக்கையில்,‘‘ எம்எஸ்எம்இ துறை 2 அதிர்ச்சியில் சிக்கியுள்ளது. ஒன்று பணமதிப்பிழப்பு. மற்றொன்று ஜிஎஸ்டி. பணமதிப்பிழப்பால் ஆடை அணிகலன், ஜெம்ஸ், ஜூவல்லரி போன்ற தொழில்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்ததாக ஜிஎஸ்டி உற்பத்தி விலை மற்றும் இயக்குதல் செலவை அதிகரித்துவிட்டது. எம்எஸ்எம்இ துறை வரி வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. இதில் 60 சதவீதம் புதிய வரி விதிப்பு முறைக்கு தயாராகவில்லை’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.