மும்பை: கடந்த 2016ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, வங்கிகளில் அதிகளவு தொகையை செலுத்திய மற்றும் 2016-17ம் நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத 80,000 பேர், விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

இதுதொடர்பாக, வருமான வரித்துறையின் சார்பில் கூறப்படுவதாவது, “பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வங்கிகளில் மிக அதிக தொகையை செலுத்திய மற்றும் 2016-17ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத 3 லட்சம் பேருக்கு, அதுதொடர்பான விளக்கத்தைக் கேட்டு, வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால், அவர்களில் 87,000 பேர்களிடமிருந்து இன்னும் சரியான பதில்கள் வந்து சேரவில்லை. எனவே, இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் முறையான விசாரணை நடத்தப்படவுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விசாரணைப் பணி வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அல்லது அதிகபட்சமாக ஜுன் 30ம் தேதிக்குள் முடிவடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து விரிவான விபரங்களை சேகரிக்க வரித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களின் மொத்த வருமானத்தை ஆய்வுசெய்யும் உரிமையும் அளிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி