பணமதிப்பிழப்பு: முறைகேடுகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் எத்தனை பேர்?

டில்லி,
ணமதிப்பிழப்பு அமல்படுத்திய உடன்,  பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிய அரசு அதிகாரிகள் 180 பேர் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8ந்தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பை அமல்படுத்தியது.  இன்றுடன் ஓராண்டு முடிவடையும் நிலையில், இந்த நாளை, கறுப்பு தினமாக அனுசரித்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன.

ஆனால், கருப்புப் பண ஒழிப்பு தினம் என்று பா.ஜ.க சொல்கிறது. இந்நிலையில், மதிப்பிழக்கப்பட்ட  பழைய ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன.

வங்கி மற்றும் அரசு அதிகாரிகள் உதவியோடு கமிஷன் அடிப்படையில்  இந்தச் சம்பவங்கள் நடைபெற்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாயினர்.

இந்நிலையில்,  பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியவர்கள், மாற்ற முயன்றவர்கள் என 307 பேரை சி.பி.ஐ கைது செய்துள்ளதாகவும்,  அவர்களில் 180 பேர் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் என்றும் கூறி உள்ளது.

இவர்களில் 77 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.