இது மக்கள் விரோத நடவடிக்கை, கறுப்பு பணத்தை ஒழிக்காது – பொருளதார நிபுணர்

கறுப்புப்பண பதுக்கலை தடுக்கும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நவம்பர் 8 நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது பலதரப்பட்ட தளங்களிலிருந்து வேறுபட்ட கருத்துக்களை எழுப்பியிருக்கிறது.

டெல்லி ஜவர்ஹர்லால் நேரு பல்கலை கழகத்தின் மூத்த பொருளாதார பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இதை “அறிவற்றதும், சாதாரண மக்களுக்கு எதிரானதுமான நடவைக்கை” என்று கடுமையாக விமர்ச்சித்துள்ளார். இந்த நடவடிக்கை கறுப்புப்பணத்தை ஒழிக்க துளியும் உதவாது என்று தனது கட்டுரை ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். சற்று நீளமான கட்டுரைதான், ஆனால் இந்த விவகாரம் குறித்து நல்ல புரிதலை தரும் கட்டுரையாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர் தனது கட்டுரையில் என்ன சொல்ல வருகிறார் என்பதை அலசுவோம்:

notes

இந்த அதிரடி(!) நடவடிக்கை மூலம் கறுப்புப்பணம் ஒழியும், கள்ளநோட்டு ஒழியும் என்கிறார்கள். நான் கள்ள நோட்டு விவகாரத்துக்கு அப்புறம் வருகிறேன். முதலில் கறுப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை உதவுமா என்று பார்க்கலாம். குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கூட இதை “கறுப்பு பணத்தை தடுக்கும் சிறந்த நடவடிக்கையாக” கருதி எப்படி அனுமதியளித்தார் என்று புரியவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியை இந்த நடவடிக்கை மூலம் கறுப்புபணத்தை ஒழிக்க வந்த இரட்சகராக முன்னிறுத்த விரும்புகிறவர்கள் “கறுப்பு பணம்” என்றால் என்ன என்ற அடிப்படை அறிவற்றவர்கள் என்றுதான் சொல்வேன். கறுப்பு பணம் என்றால் கட்டுக்கட்டாக பல நூறு கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை பெரிய பெரிய பெட்டிகளில் வைத்து மறைவான இடங்களில் பதுக்கி வைத்திருப்பது என்றுதான் பலரும் கற்பனை செய்து கொள்கிறார்கள். இதுவே முதலில் தவறு… சரி, அவர்கள் கருத்துப்படியே இப்படி கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைப்பதுதான் கறுப்புப் பணம் என்று வைத்துக் கொண்டாலும் அதையாவது இந்த நடவடிக்கை தடுக்க உதவுமா என்றால் அதுவும் இல்லை.

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு கைவசம் உள்ள அந்த நோட்டுக்களை ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் வங்கியில் கொண்டு வந்து டெப்பாசிட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துட்டார்கள், உதாரணத்துக்கு வீட்டில் ஒரு 20 கோடி ரூபாய்களை 500, 1000 நோட்டுக்களாக பதுக்கி வைத்திருக்கிறவர்கள் ஒன்று நஷ்டமடைந்து அழுது புலம்புவார்கள் அல்லது அந்த நோட்டுக்களை மொத்தமாக கொண்டு வந்து மாற்ற முயன்று வருமானவரித் துறையிடம் மாட்டிக்கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி நடக்கப்போவதில்லை.

அப்படிப்பட்டவர்கள் டிசம்பர் 30-க்குள் பணத்தை பல கூறுகளாக பிரித்து பலர் மூலம் பல நாட்கள் சிறிது சிறிதாக வங்கிகளில் சேர்த்து வெள்ளையாக மாற்றிக்கொள்வார்கள். இது கடினம்தான். ஆனால் இது போன்ற தில்லாலங்கடி வேலைகளை அசாத்தியமாக செய்து கொடுப்பதற்கென்றே ஏகப்பட்ட கைதேர்ந்த இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது பிசியான காலகட்டம் அவ்வளவுதான்!

கறுப்புப்பணம் இரு வகைகளில் குவிக்கப்படுகிறது ஒன்று சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் அதாவது கள்ளக்கடத்தல், போதைப்பொருள் வியாபாரம் போன்றவற்றை உதாரணமாக கொள்ளலாம், இன்னொன்று சட்டத்துக்குட்பட்ட தொழில் செய்தாலும் அதனால் பெற்ற வருமானத்தை நேர்மையாக அரசுக்கு அறிவிக்காமல் ஏமாற்றுவது. உதாரணத்துக்கு ஒரு குறிப்பிட்ட வியாபாரம் மூலம் ஒருவர் 100 கோடி சம்பாதிக்கிறார் என்றால் அவர் தான் 75 கோடிதான் சம்பாதித்ததாக அரசுக்கு கணக்கு காட்டுவார். மிச்சம் 25 கோடி கறுப்புப் பணமாகிவிடும்.

மேற்சொன்ன இரண்டுமே சட்டவிரோதம்தான், இதை “கறுப்பு செயல்கள்” என்று அழைக்கலாமா? பிரச்சனைக்கு மூலகாரணமான அந்த “கறுப்பு செயல்கள்” மீது போர்தொடுக்காமல், கறுப்புப் பணத்துக்கு எதிராக கம்பு சுற்றும் வேலையைத்தான் மோடி அரசு தற்போது செய்திருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ சாதாரண மக்களே! நேர்மையான, தீவிரமான, இரும்புக்கரம் கொண்ட நடவடிக்கைகள் மூலம் அந்த “கறுப்பு செயல்களை” அரசு தடுத்திருக்கலாம். கம்பியூட்டர்கூட கண்டுபிடிக்கப்படாத காலங்களில் இதுபோன்றதொரு நடவடிக்கையை இங்கிலாந்து அரசு வெற்றிகரமாக நடத்திக் காட்டியது வரலாறு!

இன்னொருபக்கம் கறுப்புப்பணத்தின் பெரும்பான்மையானவை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தான் அதை மீட்டு எல்லா இந்தியர்களுக்கும் பகிர்ந்தளிக்கப் போவதாகவும் தனது தேர்தல் பிரச்சாரத்திலேயே பிரதமர் மோடி சொல்லியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் பணத்தை என்ன இந்திய 500, 1000 நோட்டுகளிலா அந்த வெளிநாட்டு வங்கிகள் வைத்திருக்கும்? அந்த வங்கிகள் அந்த பணத்தை உலகளாவிய கறுப்பு செயல்களுக்கு நிதி உதவியாக பயன்படுத்துகின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும்!

ரூபாய் நோட்டுக்களை செல்லாதவையாக அறிவிப்பது இந்தியாவில் இது புதிதல்ல, ஏற்கனவே முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் இதை முயன்று பார்த்திருக்கிறார். அவர் 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தார். அன்று அது எளிய மக்களை பாதிக்கவில்லை, காரணம் அவர்கள் அக்காலத்தில் அந்த பெரிய நோட்டுக்களை பார்த்ததுகூட இல்லை. அதே வேளையில் மொராஜி தேசாயின் முயற்சி கறுப்புப் பணத்தையும் ஒழிக்க முடியவில்லை என்பது வரலாறு. இன்றோ இந்த நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை ஒழிக்க இயலாது என்பது ஒருபக்கமிருக்க சாதாரண மக்களை வெகுவாக பாதிக்கும் என்பது தான் இதன் இருண்ட உண்மை. காரணம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அனைவர் கையிலும் இன்று புழங்குகின்றன.

இந்த நடவடிக்கை இது காகிதப் பணத்திலிருந்து ஆன்லைன் மற்றும் பணமற்ற பரிவர்த்தனைக்கு அனைவரும் மாற உதவும் என்றொரு வாதமும் இருக்கிறது. அப்படி மாறுவதால் மட்டும் “கறுப்பு செயல்கள்” நடைபெறாமல் தடுக்க முடியுமா? அல்லது இந்திய கறுப்புப்பணம் பதுக்கப்பட்ட வெளிநாட்டு வங்கிகள் அவற்றை “கறுப்பு செயல்களுக்கு” பயன்படுத்துவதைத்தான் தடுக்க முடியுமா? இந்தியாவில் ஆன்லைன் மற்றும் பணமற்ற பரிவர்த்தனைக்கு பாமரமக்கள் மாறுவது அத்தனை எளிதான காரியமா?

இனி கள்ளநோட்டு பிரச்சனைக்கு வருவோம். இந்திய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அண்டை நாடுகளால் கள்ள நோட்டாக அச்சிடப்பட்டு இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க பயன்படுகிறது, அதை தடுக்க மேற்கண்ட ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவிப்பதன் மூலம் அந்த நடவடிக்கையை தடுக்க இயலும் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டாலும் பழைய பணத்தை கள்ளநோட்டு அடித்தவர்கள் அதே தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அறிமுகப்படுத்தவிடுக்கும் புதிய நோட்டையும் கள்ள நோட்டாக அச்சிடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஒருவேளை அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய நோட்டுக்கள் கள்ளநோட்டாக அச்சடிக்கப்பட முடியாத அளவுக்கு அதி நுட்பமானவையாக இருந்தால் இந்த நடவடிக்கையை படிப்படியாகவே செய்திருக்கலாமே! இப்படி தடாலடியாக எமர்ஜென்சி அறிவித்ததுபோல செய்து மக்களை அப்பாவி ஏழை எளிய மக்களை திணறடித்திருக்க வேண்டாமே!

பிரிட்டிஷாரின் காலணி அரசு கூட செய்யத் துணியாத ஒரு மக்கள் விரோத நடவடிக்கையை மோடி அரசு சர்வசாதாரணமாக செய்திருக்கிறது. இது என்னவோ அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போலத்தான் இருக்கிறது என்று பிரபாத் பட்நாயக் தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.