ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்தீர்களா?….. வருகிறது வருமான வரி துறை நோட்டீஸ்

டெல்லி:

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு ரூ. 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தவர்களிடம் வருமான வரித் துறை விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான நோட்டீஸ் இன்னும் 2 வாரங்களில் வீடு தேடி வரும் என தெரிவிக்கப்பட்டள்ளது. மொத்தம் 1.5 லட்சம் வங்கி கணக்குகளில் ரூ. 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் டெபாசிட் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 75 லட்சம் பேருக்கு சொந்தமான ஒரு கோடி வங்கி கணக்குகளில் சந்தேகப்படும் படியான அளவில் பணம் டொபசிட் செய்திருப்பது தெரியவந்தள்ளது.

கடந்த 2 மாதங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பதிவான ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரூ. 600 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ. 150 கோடி புதிய ரூபாய் நோட்டுகளாகும்.

கடந்த டிசம்பர் 30ம் தேதி வரை ரூ. 2.5 லட்சம் வரை வரி இல்லாமல் தனி நபர் டெபாசிட் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. கருப்பு பண முதலைகள் தங்களது பணத்தை ஜன் தன் வங்கி கணக்குகள் மூலம் வெள்ளையாக்க முயற்சித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்தவர்கள், அதிக செலவில் பழைய ரூபாய் நோட்டுக்கள் மூலம் பொருட்கள் வாங்கியவர்களிடம் வருமான வரித் துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜனவரி மாத இறுதி வரை டெபாசிட் ஆகும் விபரங்களையும் வங்கிகளிடம் இருந்து வருமான வரித் துறை கேட்டுள்ளது.

You may have missed