அல்மோரா:
ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு பொருளாதார கொள்ளை என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா அருகே நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான நிதியை பிரதமர் மோடி ஒதுக்கவில்லை. மாநிலத்தில் உள்ள மலை பகுதிகளில் போன் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. பின்னர் எப்படி மின்னணு பணப்பரிமாற்றம் செய்ய முடியும். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் என்பது ஒரு பொருளாதார கொள்ளை. இந்த திட்டம் ஏழைகளுக்கு முற்றிலும் எதிரானது. அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தை பயன்படுத்தி ஏழை மக்களிடம் சுரண்டப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு பறித்து விட்டது. ஒரு சதவீத பணக்காரர்கள் மட்டுமே கறுப்பு பணம் வைத்துள்ளனர். ஏழை மக்களிடம் கறுப்பு பணம் இல்லை. ரூபாய் நோட்டு வாபசால், இந்தியாவை பிரதமர் இரண்டாக பிரித்து விட்டார். பா.ஜ., தேர்தல் அறிக்கையில் அறிவித்த ரூ.15 லட்சம் எத்தனை பேருக்கு கிடைத்தது என்றார்.