புதுடெல்லி: விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றின் கிளைகள், ஏப்ரல் 1ம் தேதி முதல், பரோடா வங்கியின் கிளைகளாக செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; வங்கிகள் இணைப்பு செயல்பாட்டின் ஒரு பகுதியாக, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவை, பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டுவிட்டன. எனவே, மேற்குறிப்பிட்ட இரண்டு வங்கிகளின் கிளைகளும், ஏப்ரல் 1ம் தேதி முதல், பரோடா வங்கியின் கிளைகளாகவே செயல்படும்.

இந்த இணைப்பை ஒட்டி, பரோடா வங்கியில் ரூ.5,042 கோடியை முதலீட்டு தொகையாக செலுத்தியுள்ளது மத்திய அரசு. இந்த இணைப்பையொட்டி, விஜயா வங்கியின் பங்குதாரர் அனைவரும், தாம் கொண்டுள்ள ஒவ்வொரு 1000 பங்குகளுக்கும் 402 வேறுபாட்டு விகிதப் பங்குகளைப் பெறுவார்கள்.

அதேசமயம், தேனா வங்கியின் பங்குதாரர்கள், ஒவ்வொரு 1000 பங்குகளுக்கும், 110 வேறுபாட்டு விகிதப் பங்குகளைப் பெறுவார்கள்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தேனா மற்றும் விஜயா வங்கிகளை, பரோடா வங்கியுடன் இணைப்பது குறித்து மத்திய அரசின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுக்கு அடுத்து, பரோடா வங்கி பெரிய வங்கியாக மாற்றம் பெற்றுள்ளது.

– மதுரை மாயாண்டி