சென்னை:

மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. சென்னை அரசு மருத்துவமனைகளில் தினமும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு 5 ஆயிரம் பேருக்கு சிகிச்சை பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 5ஐ எட்டியுள்ளது. நேற்று இளம்பெண் ஒருவர் மரணம் அடைந்த நிலையில், இன்று  திருத்தணியை அடுத்து மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற 5 வயது சிறுமி பலியானார்.

மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அமிர்தலிங்கம்  என்பவரின் மகள் நந்தினி காய்ச்சல் கரணமாக கொத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையிலும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட நிலையில் காய்ச்சலின் தீவிரம் குறையாததால்  சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களில் திருத்தணி வட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒரு குழந்தை காய்ச்சலுக்கு பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 122 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் கர்ப்பிணி பெண் உட்பட 23 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 6 குழந்தைகள் உட்பட 36 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சலுக்கு 128 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இருந்தாலும், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை, கும்பகோணம் தலைமை மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக 297 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 83 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 45 பேர் காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 7 ஆண்களும், 8 பெண்களும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர்.

டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் பாதிப்புகளின் காரணமாக அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் திருவள்ளுர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10 சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளது. அவர்களுக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மழை காலம் தொடங்கி இருப்பதால், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவது  சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் இருந்தாலும், அதை எதிர்கொள்ள தமிழகஅரசு தயாராக இருப்பதாகவும், அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பருவ மழையால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு துறைகள் மூலம் பல தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், மக்களிடையே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க  அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அரசியல் கட்சிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.