தமிழகத்தில் ‘ஜெட்’ வேகத்தில் பரவும் டெங்கு: ஒரே நாளில் 5 பேர் பலி; மதுரை மருத்துவமனையில் 100பேர் அனுமதி

சென்னை:

மிழகத்தில் பீதியை ஏற்படுத்தி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இன்று ஒரே நாளில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும்  டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது. இது மக்களி டையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.  தமிழகத்தில் அவ்வப்போ விட்டு விட்டு மழை பெய்வது, பின்னர் கடுமையாக வெயில் அடிப்பது போன்ற சீதோஷ்ண நிலைகள் மற்றும் கொசுக்களினால் ஏற்படும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 சிறுவர்கள்  பலியான நிலையில், கோவையில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை,  ராயப்பேட்டை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளிலும் பலர் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில்  டெங்கு அறிகுறியுடன் பெரியவர்கள் 80 பேரும், குழந்தை கள் 20 பேரும் ஆக மொத்தம் 100 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் மருதுபாண்டியன் கூறி உள்ளார்.மேலும் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 115 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் முகமது அப்துல், ராமமூர்த்தி, தருண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிரிழப்புக்கு காரணம் பன்றிக்காய்ச்சலா? அல்லது டெங்கு காய்ச்சலா? என்ற விவரம் வெளியிடவில்லை.

திருவள்ளூரில் மர்மக்காய்ச்சலால்  மாணவன் நித்தீஷ்வீரா,  அனிதா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தனர்.

மதுராந்தகம் பகுதிகளில் 124 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 124 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வரும் நேரத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வைரஸ் காய்ச்சலும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த நான்கு தினங்களில் 400க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்திலும் மர்ம காய்ச்சல் காரணாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஓமலூர் அருகே காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்து உள்ளனர். சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும், மருந்து மாத்திரைகள் இல்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஓமலூர் அரசு மருத்துவமனையில் தினமும் 700 முதல், 800 பேர் புறநோயாளிகளாக வந்து செல்வதாகவும், கடந்த  2  நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வந்தனர். நேற்று மட்டும் 1,112 பேர் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வந்துள்ள தாகவும் மருத்துவமனை அதிகாரி கூறி உள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சிகிச்சைக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஜெட் வேகத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.