வெ. நீலகண்டன்  அவர்களது முகநூல் பதிவு:
 
Clipart-Cartoon-Design-06
ரசுகள் ஆயிரத்தெட்டு மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்கலாம். ஆனால் அவற்றை அதிகாரிகள் எந்த அளவுக்கு முனைப்போடு மக்களிடம் எடுத்துச் செல்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. அற்புதமான நலத்திட்டங்கள் பலவும் அதிகாரிகளின் அலட்சியத்தால், ‘பயனாளிகளே இல்லை’ என்று திரும்பப் பெறப்படுவதும், முடங்கிக் கிடப்பதும் சாதாரணமாகி விட்டது. அப்படியாக முடங்கிக் கிடக்கும் ஒரு நல்ல திட்டம்தான், டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண நிதித் திட்டம் (Dr.Ambedkar Scheme for Social Integration through Inter-Caste Marriages).
சாதி மறுப்புத் திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நல்வாழ்வுக்காகவும், சமூக அங்கீகாரத்துக்காகவும் பொருளாதார பாதுகாப்புக்காகவும் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரப் பகிர்வு அமைச்சகம் 2013ல் இந்த நிதித்திட்டத்தை உருவாக்கியது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அம்பேத்கர் ஃபவுண்டேஷனிடம் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், ஒரு ஆண்டுக்கு இந்தியா முழுவதும் 500 தம்பதிகளைத் தேர்வுசெய்து ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதை அம்பேத்கர் ஃபவுண்டேஷன் இறுதி செய்து நிதியுதவியை அளிக்கும்.
கொடுமை என்னவென்றால், திட்டம் தொடங்கப்பட்டது முதல் இன்றுவரை இந்த நிதியுதவியைப் பெற்றவர்கள், வெறும் 19 தம்பதிகள் மட்டுமே!
ஆந்திராவில் 5, தெலுங்கானாவில் 5, புது டெல்லியில் 3, மேற்கு வங்காளத்தில் 3, ஹரியானாவில் 2, ராஜஸ்தானில் ஒன்று. தமிழகத்தில்? ஒருவர் கூட இல்லை!
சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிப்பவர்கள், சங்கங்களைக் கட்டமைத்து சாதி மறுப்பு தம்பதிகளின் உரிமைக்காக போராடுபவர்கள், சாதி மறுப்புத் திருமணம் செய்து வைப்பதையே பணியாகக் கொண்டவர்கள், காதல் திருமணம் செய்த காரணத்துக்காக கொலை செய்யப்படும் – தாக்கப்படும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்காகப் போராடுபவர்கள் உள்பட எவருமே இப்படியான ஒரு நிதித் திட்டம் இருப்பதை அறியவில்லை.
பொதுவாக, திருமண நிதியுதவித் திட்டங்களை செயல்படுத்துவது மாநிலங்களில் உள்ள சமூக நலத்துறை. இதற்கென சமூக நலத்துறையில் தனிப்பிரிவே உண்டு. இந்தப் பிரிவில் ஏராளமான ஊழியர்களும், அதிகாரிகளும் இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள், திருமண உதவித் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆதி திராவிடர் நலத்துறையானது சமூக நலத்துறையோடு இணைந்து பங்காற்ற வேண்டும். கலெக்டரின் பரிந்துரைப்படி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இத்திட்டத்திற்கான மனுக்களைப் பெற்று, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருக்கு அனுப்பி, அவர் மூலம் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டு, தலைமைச் செயலகம் மூலமாகவே அம்பேத்கர் ஃபவுண்டேஷனுக்கு மனுக்கள் செல்ல வேண்டும்.
ஆனால், இந்த நிதித்திட்டம் பற்றி ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கோ, சமூக நலத்துறை அதிகாரிகளுக்கோ தெரியவில்லை என்பது பேரவலம்.
சமூகநலத்துறையில் திருமண உதவித் திட்டங்கள் வழங்கும் பிரிவின் 044-25665926 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோம். ‘‘நாங்கள் மாநில அரசின் திருமண உதவித்திட்டங்களை மட்டுமே வழங்குகிறோம். மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கு மேல் தகவல் தேவைப்பட்டால் எழுத்து மூலமாகக் கேளுங்கள்…’’ என்றார் அங்கிருந்த அசிஸ்டென்ட் செக்‌ஷன் அதிகாரி (ஏ.எஸ்.ஓ).
கடந்த டிசம்பர் 17ம் தேதி, மாநிலங்களவையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் குமார், இந்த நிதியுதவித் திட்டம் குறித்து விளக்கம் கேட்டார். அதற்குப் பதில் அளித்த சமூக நீதித்துறை அமைச்சர் விஜய் சம்லா, ‘‘ஆந்திரா, தெலுங்கானா தவிர பிற மாநிலங்கள் இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை. தங்கள் மாநிலங்களில் பிரபலப்படுத்தவும் இல்லை’’ என்று பதில் அளித்தார்.
‘‘இந்தத் திட்டம் மட்டுமல்ல… இதுமாதிரி சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு ஏகப்பட்ட நலத்திட்டங்கள் உண்டு. ஆனால், அதிகாரிகளுக்கே பல திட்டங்கள் பற்றித் தெரியவில்லை. அம்பேத்கர் நிதியுதவித் திட்டம் பற்றி ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், சமூக நலத்துறையை கை காட்டுகிறார்கள். சமூக நலத்துறை அதிகாரிகள், ஆதி திராவிடர் நலத்துறையை அணுகச் சொல்கிறார்கள்.
இவர்களிடம் போராடி ஓய்ந்து, நாங்கள் நேரடியாகவே அம்பேத்கர் ஃபவுண்டேஷனை அணுகி 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அளித்திருக்கிறோம்…’’ என்கிறார் இந்திய கலப்புத் திருமண தம்பதிகள் சங்கத்தின் தலைவர் அழகேசன்.
தமிழகத்தில் பிற சமூகத்தினரைக் காதலித்து மணம் முடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். இந்திய அளவில் தமிழகத்தில் கௌரவப் படுகொலைகளும் அதிகரித்து வருகிறது. சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு இல்லாமல் தவிக்கிறார்கள், சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதிகள். இப்படியொரு நல்ல திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அதிகாரிகள், அதுபற்றி புரிதலே இன்றி மௌனித்துக் கிடக்கிறார்கள். நல்ல அரசாங்கம்… நல்ல அதிகாரிகள்..!
– வெ.நீலகண்டன்
யாரெல்லாம் இந்த நிதியுதவியைப் பெறலாம்?
* சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களில் ஆண் அல்லது பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
* இருவருக்கும் முதல் திருமணமாக இருக்க வேண்டும்.
* இருவரின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* திருமணம் முடிந்த உடனே ‘இந்து திருமணப் பதிவுச் சட்டம்-1955’ன் கீழ் திருமணத்தை பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்து ஓராண்டுக்குள் இருக்க வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
* கணவன், மனைவியின் சாதிச் சான்றிதழ்
* இருவரின் வருமானச் சான்றிதழ்
* திருமணப் பதிவுச் சான்றிதழ்
* திருமணத்திற்குப் பிறகு சேர்ந்துவாழ்வதை உறுதிப்படுத்தும் வகையில் தம்பதியினர் இணைந்து 10 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் விரிவான அஃபிடவிட் இணைக்க வேண்டும். அதில் கெசடட் தகுதிபெற்ற அலுவலர் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
* எம்.பி. அல்லது எம்.எல்.ஏவின் பரிந்துரைக் கடிதம். (ராஜ்யசபா எம்.பி.யிடமும் வாங்கலாம்).
யாரிடம் விண்ணப்பிக்க
வேண்டும்?
நேரடியாக Director, Dr.Ambedkar Foundation, 15, Janpath, New Delhi-110 001 (தொலைபேசி: 91-11-23320571, 23320576) என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரியிடம் நேரடியாகத் தரலாம்.
கூடுதல் விபரங்களுக்கு: ambedkarfoundation.nic.in