புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு! பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து சட்டப்பேரவையில்  விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால்,  பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில்  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையின் மூன்றாவது நாள் கூட்டமான இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  புதிய கல்வி கொள்கை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது,   குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் புதிய கல்விக் கொள்கை, ”புதிய கல்விக் கொள்கையில் 3,5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் உள்ளன. இது மாணவர்களைப் பாதிக்கும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,  அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து விவாதிக்க வேண்டும். நாளை  சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று  வலியுறுத்தினார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின்மீது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், விஜயதாரணி  ‘புதிய தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த கல்விக் கொள்கை பள்ளி யின் வளங்களை பலப்படுத்தும் என்பதை ஏற்க முடியாது. பள்ளியில் 5+3+3+4 என்ற முறையில் வகுப்பை பிரித்து இருப்பது சரியானதாக இருக்க முடியாது.10+2 என்பது தான் முறையானதாகும். இந்த மும்மொழிக் கொள்கை என்பது திணிப்புதான். அதை விட்டுவிட்டு 2 மொழிக் கொள்கையே தொடர வேண்டும். அதேபோன்று ஹிந்தியை கட்டாய மொழியாக்கக் கூடாது’ என தெரிவித்தார்.

தொடர்ந்து மற்ற கட்சியினரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசசாமி,   தேசியக் கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதன் முடிவுகள் வந்த பிறகே முடிவு செய்ய முடியும் என்று ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்தார்.

இதையடுத்து,  முதல்வரின்  பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.