சென்னை:
ருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள இடங்களில், 15 சதவீத இடங்களை மத்திய அரசுக்கு, அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும்… அதேபோல, மருத்துவ மேற்படிப்புக்களுக்கான இடங்களில் 50 சதவீத இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும்… ஆனால் இந்த இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளதாகவும், இதில், 50 சதவீத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு மறுப்பதால் இப்பிரிவு மாணவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், மத்திய அரசின் 27 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றினால் கூட, நடப்பு கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்பில் மொத்தமுள்ள 8 ஆயிரத்து 137 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 2 ஆயிரத்து 197 இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் இருந்து 960 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடங்களில் 50 சதவீத இடங்களான 430 இடங்களை பெற தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உரிமை உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் போது, தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், 425 பேர் மருத்துவ மேற்படிப்பு வாய்ப்பை இழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்பட்ட 795 இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், 395 பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க., எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பியும், அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு பதிலளித்த மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பரிசீலிக்க முடியாது என தெரிவித்தது.

வழக்கு நிலுவையில் உள்ளதால், மாநில அரசு, 50 சதவீத இடஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றாமல் மருத்துவ மேற்படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.