டில்லி

சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்யப்பட்ட இந்திய கறுப்புப் பண விவரங்களைப் பெற சுவிட்சர்லாந்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்தியக் கறுப்புப் பணம் பெருமளவில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.     இந்தியாவின் பெரிய தொழிலதிபர்கள்,  பிரபல அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் தங்கள் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.   பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் இந்திய மக்களுக்கு தலைக்கு ரூ. 15 லட்சம் அளவுக்கு தர முடியும் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.    அதில் “இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.   அதன் படி இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கிகளில் செய்யப்பட்டுள்ள முதலீடு பற்றிய விவரங்கள் வரும் ஜனவரி 1 முதல் இந்தியாவுக்கு வழங்கப் படும்.   முதலீடுகள் பற்றிய விவரங்கள் உடனுக்குடன் அதுவாகவே (Automatically) இந்திய அரசுக்கு வந்து விடும்.” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.