நடிப்புக்கு அடுத்தபடியாக அஜித்தின் அடையாளமாக இருப்பது ரேஸிங்.

குறுகிய காலத்தில் பயிற்சி பெற்று 2002-ம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற ஃபார்முலா மாருதி சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் 4-ம் இடம் பிடித்தது ரேஸிங் வல்லுநர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

ஃபைட்டர் ஜெட் இயக்கக்கூடிய அளவு பயிற்சி பெற்றிருக்கும் அஜித், பைலட் லைசன்ஸ் வைத்திருக்கும் ஒரே இந்திய நடிகர் என்பதும் கூடுதல் தகவல்.

ஆளில்லா விமானம் இயக்குவதில் அஜித்திடம் இருக்கும் அனுபவத்தை உணர்ந்த அண்ணா பல்கலைக்கழகம், தக்‌ஷா எனும் தங்களுடைய கல்லூரி மாணவ குழுவுக்கு சிறப்பு ஆலோசகராக அஜித்தை நியமனம் செய்தார்கள். அஜித் பயிற்சி அளித்த அந்த குழு, உலக அளவிலான போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடம் பிடித்ததோடு உலகளவில் அதிக நேரம் பறந்த ட்ரோன் எனும் புது சாதனையையும் படைத்தது.

இந்த வரிசையில் தற்போது புதிதாக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்சிப் போட்டியில் 6 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் அஜித். தமிழக அளவிலான 46வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்சிப் போட்டியில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அஜித் தங்கம் வென்றுள்ளார். அஜித் தலைமையிலான சென்னை ரைபிள் கிளப் அணி மேலும் 2 பிரிவுகளில் தங்கமும், இரண்டில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. சென்னை ரைஃபிள் கிளப், மதுரை ரைஃபிள் கிளப், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் உட்பட 52 கிளப்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தன.

இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் தெரிவித்திருக்கும் வாழ்த்து செய்தியில், “தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அஜீத்குமார் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.