புத்துணர்வு சிகிச்சை பெறும் துணை முதல்வர்: கோவையில் முகாம்

கோவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இயற்கை மருத்துவ முறையில் புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இயற்கை முறையில் சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு அடிக்கடி வருவது வழக்கம். இதேபோல இயற்கை முறையில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு தேனியில் இருந்து கோவை வந்தார்.

கணபதி சங்கனூர் சாலையில் உள்ள ஆர்.கே இயற்கை நல மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு, புத்துணர்வு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வார்டில் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சைகளை அளித்தனர். தொடர்ந்து 1 வாரம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அங்கேயே தங்கி சிகிச்சை பெறுவார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.