சென்னை:

மிழக முதல்வர் எடப்பாடி மற்றும் 12 அமைச்சர்கள் வெளிநாடு பயணம் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய நிலையில், அடுத்தச் சுற்று வெளிநாடு பயணமாக ஈபிஎஸ் இஸ்ரேல் செல்லப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் சீனா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோல தமிழக சபாநாநயகர் தனாபலும் உகாண்டா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்தமாதம் 28 ஆம் தேதி முதல் இம்மாதம் 10 ஆம் தேதி வரை இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற் காக அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப் பயணத்தின்போது 8 ஆயிரத்து 365 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அத்துடன், தமிழக அமைச்சர்களும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பினர்.

இந்த நிலையில், கட்டுமான தொழில் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  முதலில் சிங்கப்பூர் செல்லும் ஓபிஎஸ், அங்கிருந்து சீனா அல்லது இந்தோனேசியாவிற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது துணைமுதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், நிதி அமைச்சர் பொறுப்பு மட்டுமின்றி  வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நகரமைப்பு திட்டமிடல், நகர்ப்புற வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உள்ளிட்ட துறைகளையும் கவனித்து வருகிறார்.

தற்போது, சிங்கப்பூரில் நடைபெற்று வரும் வீட்டு வசதி கண்காட்சியை பார்வையிடும் வகையில், அவர் செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

குறைந்த இடத்தில் அதிக வசதிகளுடன் கட்டிடங்களை கட்டுவது எப்படி, குடிசை மாற்று வாரிய வீடுகளை பொலிவுடன் அமைத்து கொடுப்பது எப்படி, நகர்ப்புற வளர்ச்சியை எவ்வாறு திட்ட மிடுவது போன்றவற்றை கண்டறியவும் சீனா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.  அவரது சுற்றுப் பயணம் தயாராகி வருவதாக நிதித்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுபோல, பேரவைத் தலைவர் பி.தனபால் உகாண்டா நாட்டுக்கு செல்ல உள்ளார். காமன் வெல்த் நாடுகளின் பேரவைத் தலைவர்கள் மாநாடு ஆண்டு தோறும் ஒவ்வொரு நாட்டில் நடத் தப் படுகிறது. இந்த ஆண்டு வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை உகாண்டாவில் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக பேரவைத் தலைவர் பி.தனபாலுக்கு அரசு அனுமதியளித்த நிலையில், அவர் வரும் 24-ம் தேதி அங்கு செல்கிறார்.