தேவர் குருபூஜை: முத்துராமலிங்கத் தேவரின் தங்கக்கவசம் நினைவிடப் பொறுப்பாளா்களிடம் ஒப்படைத்தார் ஓபிஎஸ்..

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி, அவரது திருவுருச் சிலைக்கான தங்க கவசம், வங்கி லாக்கரில் இருந்து எடுக்கப்பட்டு, தேவர் நினைவிட பொறுப்பாளா்களிடம் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்   ஒப்படைத்தாா்.

மறைந்த  முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. 113வது ஜயந்தி மற்றும் 58 ஆவது குருபூஜை அக்டோபா் 27 முதல் அக்டோபா் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, அவரது சிலைக்கு அதிமுக சார்பில், முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, கடந்த 2014ஆம் ஆண்டு  தங்க கவசம் ஒன்றை பரிசாக வழங்கப்பட்டது. இந்த தங்கக்கவசம், திருவிழாவின்போது மட்டும் உபயோகப்படுத்தப்பட்டு, பின்னர், மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியின் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேவா் ஜயந்தி விழாவின்போது இந்த தங்க கவசம் அணிவிக்கப்படும். நினைவிட பொறுப்பாளா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கையெழுத்திட்டு இந்த தங்க கவசத்தை, ஜயந்தி விழாவுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். அதுபோல, இந்த ஆண்டும்   குருபூஜை மற்றும் ஜயந்தி விழாவையொட்டி, அண்ணா நகர் வங்கியில் இருந்த தங்க கவசத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் எடுத்துச்சென்றனர். அப்போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த தங்க கவசம் போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அவை,  பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட நிர்வாகிகளிடம்  வழங்கப்பட்டது.

தேவர் பூஜையையொட்டி பசும்பொன் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று காவல்துறையினரின் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. சோழவந்தான் காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேவர் சமுதாய மக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், மைக் செட், கொட்டகை, பால்குடம், முளைப்பாரி உள்ளிட்ட வெளிப்படையான மக்கள் கூடும் விஷயங்களுக்கு அனுமதி இல்லை என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து தனித்தனியாக விழாக்களை நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், குருபூஜையில் கலந்துகொள்ள செல்பவர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று செல்லவும், வாகனத்தில் 5 பேருக்கு மேல் செல்லக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.