சமூகவலைத்தளத்தில் கொந்தளித்த பெண் சிறை அதிகாரி சஸ்பென்ட்!

Deputy jailer suspended in Chhattisgarh for social media post on tribal’s torture

 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள மத்தியச் சிறையில், பழங்குடியினப் பெண்கள் சித்ரவதை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்ட பெண் சிறை அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

ராய்ப்பூர் மத்தியச் சிறையில் துணைச் சிறை அதிகாரியாக பணியாற்றி வந்த வர்ஷா டோங்ரே,  பாஸ்டர் காவல்நிலையத்தில், பழங்குடியினப் பெண்கள் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாவதாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். பழங்குடியின பெண்களின் மார்பகங்களிலும், மணிக்கட்டு பகுதியிலும் மின்சாரம் பாய்ச்சி, காவல்துறையினர் அவர்களை சித்ரவதை செய்வதாக அதில் வார்ஷே குறிப்பிட்டிருந்தார். மாவோயிஸ்டுகளுடன் ஏற்படும் மோதலின் போது இருதரப்பிலும் கொல்லப்படுவோர் இந்தியர்கள்தானே என்றும், முதலாளித்துவ அமைப்பில் உள்ள குறைகளே பழங்குடியின மக்கள் மீது இத்தகைய வன்முறைகள் கட்டவிழ்த்துவிட காரணமாக இருப்பதாகவும் வர்ஷா மேலும் அதில் கூறியுள்ளார். பாஸ்டர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களின் குடிசைகள் தீவைத்துக் கொளுத்தப்படுவதாகவும், பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும் வர்ஷா தமது பதிவில் வேதனை தெரிவித்துள்ளார். உண்மையிலேயே மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தான் இவையா எனவும் வர்ஷா தமது பதிவில் கேள்வி எழுப்பி உள்ளார். மாவோயிஸத்தை பழங்குடியின மக்கள் விரும்பவில்லை என்றும், ஆனால் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் பொய் வழக்குகள், குடிசைகள் எரிப்பு, பாலியல் வன்கொடுமை என அவர்கள் எதிர்கொள்ளும் கொடூரங்களுக்கு யாரிடம் சென்று நியாயம் கேட்பார்கள் என்றும் வர்ஷா தனது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்.

 

சுக்மாவில் மாவோயிஸ்டுகளால் 25 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் வர்ஷா வெளியிட்ட இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்து வைரலாக சமூகவலைத்தளங்களில் பரவியதை அறிந்த வர்ஷா, தமது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவை நீக்கிவிட்டார். இருப்பினும், பொறுப்புள்ள பதவியில் இருந்து கொண்டே, தாம் சார்ந்திருக்கும் துறைக்கு எதிரான கருத்தை வெளியிட்டதற்காக வர்ஷாவை சஸ்பென்ட் செய்து சத்தீஸ்கர் மாநில சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.