பொறியியல், கடின உழைப்பு, சிறப்பான மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பானது தமிழ்நாடு: வெங்கையா நாயுடு புகழாரம்

கோவை:

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த துணைஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் ஹரிஹரன், மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாநகராட்சி துணை கமி‌ஷனர் காந்திமதி, உள்பட பாஜகவினர் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழில் பேசிய துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு, கடின உழைப்பு, சிறப்பான மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் பெயர் போனது தமிழ்நாடு என்று புகழாரம் சூட்டினார்.

நேற்று பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அங்கு நடைபெற்ற  இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் கலந்து கொண்டு  சிறப்புரை ஆற்றினார்.

தமிழில் தனது பேச்சை தொடங்கியவர்,  கட்டுமானம், பொறியியல், ஆலைப்பணிகள், கடுமையான உழைப்பு, புதிய கண்டுபிடிப்புகள், சிறப்பான மருத்துவம்  போன்றவற்றுக்கு தமிழ்நாடு சிறப்பு பெற்றது.

கோயம்புத்தூர் மாநகரம் சிறப்பாக இருப்பதால் தான், இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதாக கூறியவர், நீர்நிலை ஆக்கிரமிக்கப்படுவது  மோசமான பழக்கம், அதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தற்போது, தான் அரசியலில் இருந்து விலகினாலும், மக்கள் சேவையிலிருந்து தாம் விலகவில்லை என்றும்,  ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நடைமுறை பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தவர்,  பொதுமக்கள் முறையாக வரி செலுத்தினால் தான், திட்டங்களை செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் மற்றும் தொழிலதிபர்கள், அதிகாரிகள், பாஜக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.