பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி : நீதிமன்றம் தீர்ப்பு

ண்டிகர்

தேரா சச்சா சவுதா என்னும் அமைப்பின் தலைவரான குருஜி ராம் ரஹிம் மீது தொடரப்பட்ட பலாத்கார வழக்கில் குற்றவாளி என கோர்ட் அறிவித்தது.

ஹரியானா – பஞ்சாப் மாநில மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது தேரா சச்சா சவுதா என்னும் நிறுவனம்,   இந்த அமைப்பின் தலைவர் சாமியாரான குர்மீத் ராம் ரஹிம் சிங்.   இவர் மீது தனது சிஷ்யைகள் இருவரை பலாத்காரம் செய்ததாக சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.   அதை ராம் ரஹிம் மறுத்தார்.

வழக்கு ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   இன்று பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.     இதனால் ராம் ரஹிமின் ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பும்   சிர்சா என்னும் இடத்தில் உள்ள இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் முன்பும் எக்கச்சக்கமான ஆதரவாளர்கள் கூடி ஆர்ப்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.   ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பல இடங்களில் கடையடைப்பு நடந்தது.

ராம் ரஹிம் தனது ஆதரவாளர்களிடையே வந்து போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டதின் பேரில் கூட்டம் சிறிது அமைதி அடைந்தது.   பல ரெயில்கள் கலவரம் ஏற்படலாம் என்னும் ஐயத்தின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளன.   ராம் ரஹிமை காவலர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.   அரசால் Z செக்யூரிட்டி கொடுக்கப்பட்டுள்ள ராம் ரஹிம்,  தனது ஆதரவாளர்களின் கார்கள் பின் தொடர பெரும் ஊர்வலமாய் நீதி மன்றத்துக்கு வந்தார்.

நீதி மன்றத்தில் உள்ள அனைத்து மொபைல்களும் செயலிழக்கப் பட்டன.   இணைய இணைப்பும் துண்டிக்கப்பட்டது.   நீதிபதி தனது தீர்ப்பில் ராம் ரஹிம் குற்றவாளி என அறிவித்தார்.   அவருக்கான தண்டனை வரும் திங்கள் அன்று அறிவிக்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

முதலில் ராம் ரஹிம் குற்றமற்றவர் என தீர்ப்பு வந்ததாக வதந்தி பரவியதில் மகிழ்ச்சியான ஆதரவாளர்கள் உண்மையான தீர்ப்பின் விவரம் கேட்டு அதிர்ந்தனர்.   சிலர் மயங்கி விழுந்தனர்.   சட்ட வல்லுனர்கள் இவருக்கு 7 வருடம் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.   ஏதும் கலவரம் நடக்காமல் இருக்க போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.