சென்னை: சாலைகள் அமைக்க செலவு செய்யப்பட்டதைவிட கிட்டத்தட்ட இருமடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு விட்டாலும், இன்னும் அந்தக் கட்டணம் குறைக்கப்படாமல் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதிலில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

தாம்பரம் மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளுக்கு இடையேயுள்ள ஆத்தூர் மற்றும் பரனூர் ஆகிய இடங்களில் அமைந்த சுங்கச் சாவடிகளில், பயனாளர்களிடமிருந்து கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2018 செப்டம்பர் 30 வரையான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட தொகை ரூ.1098 கோடி.

பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய பகுதிகளுக்கு இடைபட்ட தூரம் 103.5 கி.மீ. இந்த தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க அரசு செலவு செய்த தொகை ரூ.536 கோடி. ஆனால், செலவழித்த தொகையைக் காட்டிலும் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமான தொகை வசூலிக்கப்பட்டு விட்டாலும்கூட, இன்னும் கட்டணம் குறைக்கப்படாமல் அதேயளவிற்கு வசூலிக்கப்படுகிறது.

இந்திய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் கூறப்படுவதாவது, “கட்டணத்தைக் குறைப்பதற்கு முன்னதாக இன்னும் கூடுதலாக ரூ.354 கோடி வசூலிக்க வேண்டியுள்ளது” என்கின்றனர்.

சாலையின் பராமரிப்புக்காக மட்டுமே மிகக்குறைந்தளவு சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டிய அரசு, தனியார் நிறுவனங்களைப் போலவே அடாவடியாக செயல்படுவதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.