அரசு முழுவதுமாக முடங்கியது : உச்சநீதிமன்றத்தில் டில்லி அரசு தகவல்

டில்லி

ச்சநீதிமன்ற தீர்ப்பில் அரசுக்கு அதிக அதிகாரம் உண்டென்று கூறப்பட்ட போதிலும் ஆளுநர் செய்கையால் டில்லி அரசு முழுவதுமாக முடங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கும் டில்லி மாநில அரசுக்கும் இடையே அதிகாரம் குறித்து நடந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் அமைந்த உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது.   அந்த வழக்கில் ஆளுநரை விட அரசுக்கு அதிகாரம் உண்டு எனவும் மாநில அரசு முடிவுகளை எடுக்கலாம் எனவும் அமர்வு தீர்ப்பளித்தது.   இதனால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாக மக்கள் கருதினர்.

ஆனால் டில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிபதிகள் சிக்ரி மற்றும் நவின் சின்ஹா அமர்வில் ஒரு தகவல் அளித்துள்ளது.  அதில், “அரசின் நடவடிக்கைகள் முழுவதுமாக முடங்கி உள்ளன.   எங்களால் அரசு அதிகாரிகளை நியமிக்கவோ இடம் மாற்றவோ முடியவில்லை.   உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னும் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.   இந்த பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்” என டில்லி அரசின் வழக்கறிஞர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை ஏற்றுக் கொண்ட அமர்வு, “இந்த அமர்வு வழக்கமான ஒரு அமர்வு அல்ல.  அதனால் இது குறித்து புதிய அமர்வு ஒன்று அமைத்து இதை விசாரிக்க வேண்டி உள்ளது.   அவ்வாறு அமைக்கப்பட்ட அமர்வு இந்த மாதம் 26 ஆம் தேதி இது குறித்து விசாரணை நடத்தும்” என அறிவித்துள்ளது.