பணமதிப்பிழப்பால் இந்தியாவுக்கு பேரழிவை ஏற்படுத்திவிட்டார் மோடி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை:

மோடி அறிவித்த  பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டின் பொருளாதாரம் மீளா நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாகவும், இந்தியாவுக்கு பேரழிவை ஏற்படுத்திவிட்டார் என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கொண்ட ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்கள் செல்லாததாகியது. இது மக்களிடையே கடுமையான அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாளை கருப்பு தினமாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளனர். தற்போது பண மதிப்பிழப்பு நடைபெற்று 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பண மதிப்பிழப்பு குறித்து பதிவிட்டு உள்ளார்.

அதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், ஒருவர் இந்தியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மக்கள் தங்கள் கையில் வைத்திருந்த பணத்தை சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்ததுடன் அவர்கள் தெருவுக்கு அழைத்து வரப்பட்டனர்.  வங்கிகளுக்கு முன் முடிவில்லா வரிசையில் மக்கள் நின்றதன் காரணமாக அவர்களில் பலர் உயிரிழந்தனர் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த பண மதிப்பிழப்பு காரணமாக சிறு ஆலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோனதாகவும் இந்திய பொருளதாரம் கடுமையான இழப்பை சந்தித்து உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.