சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில், குற்றவாளிகளைக் கைது செய்வது தொடர்பாக, காவல்துறைக்கு விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார் சட்டம்-ஒழுங்கு டிஜிபி திரிபாதி.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிஎன் பிரகாஷ், இதுதொடர்பாக சில அறிவுரைகளை வழங்கிய அடுத்த சிலமணி நேரங்களில், இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், கூடுதல் நேரத்திற்கு கடையைத் திறந்து வைத்திருந்தது தொடர்பாக, காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அதுதொடர்பாக அவர்கள் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனையடுத்து, அவர்கள் அங்கு வைத்து மோசமாக தாக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது. மேலும், கோவில்பட்டி கிளைச்சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அடுத்தடுத்த நாட்களில் இறந்தனர். இது தமிழக அளவில் பெரிய எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

இது இப்படி இருக்க, வேறுசில இடங்களில் காவல்துறையினர் மேற்கொண்ட கைது நடவடிக்கைகளால்,  குற்றவாளிகள் மூலமாக சில காவல் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நிலைமை இப்படியே போனால், பல இடங்களில் காவல் நிலையங்களையே நடத்த முடியாமல் போய்விடும் என்ற கவலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த வழிகாட்டலில், காவல்துறையினர் போதிய பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் முடிந்தவரை குற்றவாளிகளை தொடாமல் இருக்க வேண்டும் என்பன போன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.